அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு அரச மருத்துவர்கள் சங்கம் சூழ்ச்சி - அமைச்சர் நளிந்த
பயிற்சி மருத்துவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் சனிக்கிழமை நண்பகலுடன் முடிவடைந்தது. அவ்வாறு விண்ணப்பிக்காதவர்களுக்கு அடுத்த குழுவினரான 1300 பேருடன் சேர்த்து நியமனம் வழங்கப்படுமா என்பதை தீர்மானிப்பது நானல்ல.
அப்பாவி பொதுமக்களைப் பணையக்கைதிகளாக்கி வேலைநிறுத்தத்தில் ஈடுபடாமல் அதற்கு எதிராக நீதிமன்றத்திற்குச் செல்லுமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்துக்கு சவால் விடுத்துள்ள சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, நியாயமான கோரிக்கைகளுக்கு அரசாங்கம் எப்போதும் செவிசாய்க்கும், ஆனால் வேலைநிறுத்தத்தை வைத்து மக்களைத் தூண்டிவிட முயற்சித்தால் அதற்கு முகம் கொடுக்க தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் 04-04-2026 அன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், மருத்துவர்கள் மேற்கொண்டு வரும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு எந்தவிதமான அடிப்படையும் இல்லை. மிக அதிகமான எண்ணிக்கையிலான பின்தங்கிய பயிற்சி மருத்துவர்கள் அரசாங்க சேவையில் இணைவதற்காக ஏற்கனவே விண்ணப்பித்துள்ளனர். ஒரு சிறிய குழுவினர் மாத்திரமே மருத்துவர்களை அச்சுறுத்த முயற்சிக்கின்றனர்.
இந்த வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன். அமைச்சராகிய என்னுடன் அவர்களுக்கு ஏதேனும் தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளோ அல்லது கோபமோ இருந்தால், அவற்றை என்னோடு தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, அதற்காக நாட்டின் அப்பாவி பொதுமக்களைப் பணையக்கைதிகளாகவோ அல்லது கேடயமாகவோ பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றேன்.
உலகில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரித்துள்ளது. இவ்வாறான கடினமான சூழலில், தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற முடியாத ஏழை எளிய மக்களே அரச வைத்தியசாலைகளை நம்பி வருகின்றனர்.
அவர்கள் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில், முச்சக்கர வண்டிகளுக்கும் பேருந்துகளுக்கும் பெரும் தொகையைச் செலவழித்து, நீண்ட தூரம் பயணம் செய்து, நீண்ட வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெற வருகின்றனர். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் கூட இவ்வாறான மக்களில் அடங்குவர்.
எனவே, இவ்வாறான அப்பாவி மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக வேலைநிறுத்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. நியாயமான காரணங்களுக்காகப் போராட்டம் நடத்தினால் அது குறித்துப் பேச முடியும், ஆனால் இந்தப் போராட்டத்திற்கு எந்தவொரு அடிப்படையும் இல்லை. இது குறித்துப் பேசுவதற்கு கூட எதுவுமில்லை.
பயிற்சி மருத்துவர்களின் நியமனங்கள் சட்டவிரோதமானவை என்றும், இடமாற்றச் சபை மூலம் மட்டுமே அவை செய்யப்பட வேண்டும் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறுமானால், அப்பாவி மக்களைத் துன்புறுத்தாமல் அதற்கெதிராக எதிராக நீதிமன்றத்திற்குச் செல்லுமாறு வலியுறுத்துகின்றேன். நீதிமன்றத்திற்குச் சென்றால் ஒருபுறம் அமைச்சராகத் நானும், மறுபுறம் சங்கமும் இருக்கும், இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.
பொருளாதார நெருக்கடி மிக்க இந்த காலத்திலும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது நியாயமான காரணத்தினால் அல்ல, அது ஒரு அரசியல் நோக்கம் கொண்டதாகும். இது அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான ஒரு முயற்சியாகும். நியாயமான கோரிக்கைகளுக்கு அரசாங்கம் எப்போதும் செவிசாய்க்கும், ஆனால் வேலைநிறுத்தத்தை வைத்து மக்களைத் தூண்டிவிட முயற்சித்தால் அதற்கு முகம் கொடுக்க அரசாங்கம் தயாராக உள்ளது.
பயிற்சி மருத்துவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் சனிக்கிழமை நண்பகலுடன் முடிவடைந்தது. அவ்வாறு விண்ணப்பிக்காதவர்களுக்கு அடுத்த குழுவினரான 1300 பேருடன் சேர்த்து நியமனம் வழங்கப்படுமா என்பதை தீர்மானிப்பது நானல்ல. அது பொதுச் சேவை ஆணைக்குழுவின் கைகளில்தான் உள்ளது. இது புதிய சட்டம் அல்ல, சுகாதார அமைச்சு நீண்டகாலமாகப் பின்பற்றி வரும் நடைமுறையாகும். பயிற்சி முடிந்து புதிய நியமனங்களை ஏற்கத் தவறும் பட்சத்தில், அவர்கள் பழைய இடங்களிலேயே நீடிக்க முடியாது என்பதுடன் அவர்களுக்குச் சம்பளமும் வழங்கப்பட மாட்டாது. அவர்களின் சேவை அத்துடன் நிறைவுக்கு வரும். இது குறித்த கடிதங்களைச் சுகாதார அமைச்சின் செயலாளர் தயாரித்து வருகின்றார்.
மக்கள் மருத்துவர்களிடமிருந்து பெரும் சேவையை எதிர்பார்க்கிறார்கள். எனவே, மக்களைப் பணையக்கைதிகளாக்க வேண்டாம். எமது தரப்பில் ஏதேனும் சட்டவிரோதச் செயல்கள் நடந்திருப்பதாகக் கருதினால் நீதிமன்றத்தை நாடுமாறு மீண்டும் வலியுறுத்துகின்றோம் என்றார்.





