அரச காணிகளில் குடியேறியுள்ள 65,000 பேருக்கு உறுதிப்படுத்திரங்கள்: பிரதியமைச்சர் அரவிந்த
காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணிகளில் வாழும் சாதாரண மக்களுக்கும் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன.
காணி சீர்திருத்த ஆனைக்குழுவுக்கு சொந்தமான காணிகள் மற்றும் ஏனைய அரச காணிகளில் குடியிருக்கும் மக்களுக்கு எதிர்வரும் மே மாதமளவில் 65,000 காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக காணி மற்றும் நீர்ப்பாசன பிரதியமைச்சர் அரவிந்த செனரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 18-02-2026 அன்று வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் சஞ்சீவ ரணசிங்க எம்பி எழுப்பிய கேள்வி யொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில், கடந்த காலங்களில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணிகளுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள முறைகளில் பல்வேறு முறைகேடுகளைக் காண முடிகிறது.
பல்வேறு காரணங்களுக்காக, பல்வேறு அரசியல் நடவடிக்கைகளுக்காக, சில நிறுவனங்களின் பொறுப்பாளர்களுடன் காணப்பட்ட தொடர்புகளுக்காக என பல்வேறு விதத்திலும் அவ்வாறு காணிகள் வழங்கப்பட்டுள்ளன. அவை தொடர்பான விசாரணைகளை நாம் மேற்கொண்டுள்ளதுடன் உரிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பொதுவாகவே கடந்த காலங்களில் காணி உரிமை வழங்கல் தொடர்பில் முறையற்ற தன்மையே காணப்படுகிறது.
அதேபோன்று காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணிகளில் வாழும் சாதாரண மக்களுக்கும் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன. அது தொடர்பில் ஆராய்ந்து உரிய சிக்கல்கள் இனங்காணப்பட்டுள்ளன.
எமது அரசாங்கம் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணிகள் மற்றும் ஏனைய அரச காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் மற்றும் காணி உரிமைப் பத்திரங்களை வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதற்காக கமத் தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பொது மக்களுக்கு சட்டபூர்வமாக, அது தொடர்பான பரிந்துரைகளை கவனத்திலெடுத்து விரைவில் சட்ட ரீதியான அந்தஸ்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.





