இருநூறு வருட கால சாபக்கேடான வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
இந்திரா காந்தி, சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதும் அந்த மக்கள் நாடற்றவர்களாகவே இருந்தனர்.
இருநூறு வருட கால சாபக்கேடான வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து மலையக மக்களின் சிறந்த வாழ்க்கைக்கான அனைத்து வேலை திட்டங்களையும் அரசாங்கம் முன்னெடுக்கும் என கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 21-05-2026 அன்றுஇடம்பெற்ற மலையக மக்கள் எதிர்கொண்டுவரும் பிச்சினைகள் தொடர்பான அவசர சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், மலையக மக்களுக்கு எமது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். ஏழு தலைமுறைகளாக அந்த மக்கள் தமது உயிர்களையும் பணயம் வைத்து இந்த நாட்டுக்காக உழைத்தவர்கள் அவர்கள்.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது முதல் அவர்கள் பெரும் கஷ்டங்களை அனுபவிப்பவர்கள். அவர்களது பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது. அவர்கள் நாடற்றவர்களாக்கப்பட்டார்கள். வேதனை நிறைந்த வாழ்க்கையே அவர்களுக்கு சொந்தமாக இருந்தது.
இந்திரா காந்தி, சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதும் அந்த மக்கள் நாடற்றவர்களாகவே இருந்தனர். நாம் இந்தியா சென்றிருந்தபோது அங்கு முகாம்களில் வாழ்ந்த இலங்கையர்களை சந்தித்தோம். அதன்பின் அவர்களது நாடற்றவர்கள் என்ற நிலையை மாற்றி யமைத்தது எமது ஜேவிபி கட்சியாகும். மலையக மக்களுக்கு எந்த வகையிலும் அவர்களது நிழலுக்குக் கூட தீங்கு விளைவிக்காத கட்சியே எமது கட்சி. எனது கட்சியில் முக்கியமான பலரும் லயன் அறைகளிலேயே வாழ்ந்தோம். அந்த வேதனைகள் எமக்குத் தெரியும்.
அதனால் அந்த மக்களின் 200 வருட சாபக்கேடான வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர்களில் அத்தனை பிரச்சினைகளுக்கும் தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஏனைய மக்கள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளையும் வழங்குவதற்கு உரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றார்.





