இலங்கையருக்கு ரஷ்ய சிவில் பிரஜைகளுக்கான அதியுயர் விருது
'ரஷ்யாவுடனான கலாச்சார மற்றும் மனிதாபிமான உறவுகளை வலுப்படுத்துவதில் சமன் வீரசிங்க பெரும் பங்களிப்பைச் செய்கிறார்' என்று ஜனாதிபதி புடின் விழாவில் உரையாற்றினார்.
இலங்கை-ரஷ்ய நட்புறவு சங்கத்தின் பொதுச் செயலாளர் மற்றும் இலங்கையில் உள்ள ரஷ்ய புவியியல் சங்கத்தின் தலைவரான சமன் வீரசிங்கவுக்கு, ரஷ்யாவின் சிவில் பிரஜைகளுக்கு வழங்கப்படும் அதியுயர் விருதான ' நட்புக்கான ரஷ்யாவின் அரச விருது' (ஆர்டன் ட்ருஷ்பி) வழங்கப்பட்டது.
ரஷ்ய தேசிய ஒற்றுமை தினத்தன்று (நவம்பர் 04) மொஸ்கோவில் உள்ள கிரெம்ளினில் மாளிகையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், ரஷ்யாவின் மிகவும் மதிப்புமிக்க சிவில் விருதியை வைத்தியர் சமன் வீரசிங்கவுக்கு வழங்கி கௌரவித்தார்.
இலங்கை - ரஷ்யாவுக்கு இடையிலான இராஜதந்திர, கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதில் சமன் வீரசிங்க பல தசாப்தங்களாக ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் சமன் வீரசிங்க இந்த கௌரவத்தைப் பெற்றார்.
'ரஷ்யாவுடனான கலாச்சார மற்றும் மனிதாபிமான உறவுகளை வலுப்படுத்துவதில் சமன் வீரசிங்க பெரும் பங்களிப்பைச் செய்கிறார்' என்று ஜனாதிபதி புடின் விழாவில் உரையாற்றினார். மேலும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் சமன் வீரசிங்கவின் பங்களிப்பைப் பாராட்டினார்.
தனது ஏற்புரையில், சமன் வீரசிங்க தனது பங்களிப்பை அங்கீகரித்ததற்காக ஜனாதிபதி புடினுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான கலாசார,கல்வி மற்றும் மனிதாபிமான ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
சமன் வீரசிங்க 2015 முதல் 2018 வரை ரஷ்யாவிற்கான இலங்கைத் தூதராகப் பணியாற்றினார், தற்போது இலங்கை-ரஷ்ய நட்புறவு சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், கொலம்பிலுள்ள ரஷ்ய புவியியல் சங்க மையத்தின் தலைவராகவும் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.





