காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படவேண்டும்: சத்தியலிங்கம் எம்.பி
ஆகவேதான் இந்திய அரசாங்கத்தாலே எங்களுக்குத் தரப்படுகின்ற அந்த 63.5 மில்லியன் டொலரை எடுத்து வடமாகாணத்தில் இருக்கிற காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யுங்கள் என்று கேட்கின்றோம்.
காங்கேசன் துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் பொருட்களின் கொழும்பு வழிச்செலவு குறைந்து பொருட்களின் விலைகள் குறைவடையும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் 18.02.2026அன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
இன்று விசேட வியாபாரப் பண்ட அறவீட்டு சட்டத்தின் கீழ் மூன்று கட்டளைகள் தொடர்பாக நாங்கள் இங்கு விவாதிக்கின்றோம். இந்தக் கட்டளைகள் தொடர்பாகப் பார்க்கும் போது எங்களுடைய நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படுகின்ற உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் போன்ற பொருட்களுக்கு அதைவிட மேலதிகமாக அறுபத்தி இரண்டு உணவுப் பொருட்களுக்கான வரி விதிப்பு சம்பந்தமாக இன்றைய இந்த விவாதம் அமைகின்றது. உங்களுக்குத் தெரியும் எங்களுடைய நாட்டிலே வடக்கு மாகாணம் என்பது வெங்காயம், உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கையிலே ஒரு பாரிய பங்களிப்பை கடந்த காலங்களிலே செய்த ஒரு மாகாணம். ஆனால் அந்த மாகாணத்திலே இப்போது இந்தப் பயிர்ச்செய்கை பல விதத்திலும் பாதிக்கப்பட்டு ஒரு நலிவுற்ற பயிர்ச்செய்கையாக இருக்கிறது. இவ்வாறு இறக்குமதிகளுக்கு வரியை விதிப்பதன் ஊடாக இறக்குமதியை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் அரசாங்கத்துக்கான வரி விதிப்பின் ஊடாக பெறப்படுகின்ற வருமானம் ஏற்படுவதோடு, உள்நாட்டு உற்பத்தியை பெருக்குகின்ற ஒரு உத்தியாக இதை நாங்கள் பார்க்கலாம்.
ஆனால் நாங்கள் இவ்வாறான உணவுப் பொருட்களுக்கு எங்களுடைய நாட்டிலே தன்னிறைவை ஏற்படுத்தக்கூடிய வகையிலே வரி விதிப்பு மாத்திரம் அதற்கு உறுதுணையாக இருக்காது. உங்களுக்குத் தெரியும் ஒரு பொருளுக்குரிய வரி விதிக்கப்படும்போது அதில் இரண்டு பக்கங்களையும் நாங்கள் பார்க்க வேண்டும். ஒன்று, இந்த வரி விதிப்பால் உள்நாட்டு உற்பத்தியை கூட்டுகின்ற போது விவசாயிகளுக்கு ஏற்படுகின்ற இலாபம். அதேபோல வரி விதிப்பின் ஊடாக நுகர்வோருக்கு ஒரு பாரிய சுமையை, செலவை ஏற்படுத்துகின்ற அடுத்த பக்கத்தையும் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது.
எங்களுடைய நாட்டைப் பொறுத்தவரையிலே உற்பத்தியாளர்களைப் பார்த்தீர்களானால் அவர்களுடைய உற்பத்தியைப் பெருக்குவதற்கு பல விடயங்களை அரசாங்கம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உதாரணமாக, இந்த உற்பத்தியாளர்கள்; இந்த நாடு தன்னிறைவு அடைய வேண்டுமாக இருந்தால் அவர்களுக்கான பல உதவிகளை இந்த அரசாங்கம் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. அந்த வகையிலே இந்த உற்பத்தியாளர், விவசாயிகளுக்கான மானியம் மிகவும் முக்கியமான ஒரு விடயம். அதிலும் குறிப்பாக உர மானியம். உங்களுக்குத் தெரியும் கடந்த பெரும் போகத்தில் கூட நெல்லுக்கான உர மானியத்தைப் பெற வேண்டிய எமது விவசாயிகள், வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் தற்போது 85 வீதமான அறுவடை முடிந்துவிட்டது. எனினும் இன்றுவரை அவர்களுக்கான உர மானியம் கிடைக்கவில்லை.
இவ்வாறிருக்குமாக இருந்தால் எவ்வாறு நாங்கள் இந்த நாட்டினுடைய உற்பத்தி பொருளாதாரத்தை பெருக்குவது. அதேபோல அவர்களுக்கான விற்பனை விலை நிர்ணயம் செய்வது. நெல்லுக்கான நிர்ணயம் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் கொள்வனவு நடைபெறவில்லை. அதேபோல அழிவுக்கான காப்புறுதி இருக்கின்றது. இன்றுவரை முழுமையாக காப்புறுதி செய்யப்படவில்லை.
அதேபோல வனவிலங்குகளால் ஏற்படுகின்ற தாக்கம், அதற்கொரு முடிவில்லை. ஆகவே நாங்கள் உற்பத்தி பொருளாதாரத்தை பெருக்குவதற்காக உள்நாட்டு உற்பத்தியை கூட்டி தன்னிறைவு அடைவதற்காக நாம் பல விடயங்களை செய்யும்போது இந்த வரி விதிப்பு மாத்திரம் எங்களுக்கு உதவி செய்யாது என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் கூற விரும்புகிறேன்.
அதேபோல இறக்குமதியை எடுத்துப் பார்த்தீர்களானால், நாங்கள் இறக்குமதி செய்யும்போது இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்களுக்கான விலை அந்தப் பொருளுடைய விலையுடன் போக்குவரத்துக்கான செலவும் சேர்க்கப்படுகிறது. அதற்கு மேலே வரி விதிக்கப்படுகிறது.
ஆனபடியால்தான் நாங்கள் கேட்கின்றோம், இந்த விலைகளை குறைப்பதாக இருந்தால், குறிப்பாக விவசாய உற்பத்தி பொருட்கள் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்படுகிறது. அந்த உற்பத்தி பொருள் இந்தியாவில் இருந்தே கொழும்புக்கு வந்து கொழும்பில் இருந்து வடமாகாணத்துக்கு வரும்போது அதனுடைய விலை பெரிதாகின்றது.
ஆகவேதான் இந்திய அரசாங்கத்தாலே எங்களுக்குத் தரப்படுகின்ற அந்த 63.5 மில்லியன் டொலரை எடுத்து வடமாகாணத்தில் இருக்கிற காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யுங்கள் என்று கேட்கின்றோம்.
ஆனால் இந்த அரசாங்கம் அதைக் கணக்கிலெடுப்பதாக தெரியவில்லை. ஆகவே எங்களுடைய மக்களுக்கான பொருளாதார மேம்பாட்டுக்கு தேவையான வேலைகளைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகிறேன்.
இந்த காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி தொடர்பாக ஜனாதிபதி அவர்கள் தலையிட்டு அந்த துறைமுகத்துக்கு அபிவிருத்திக்கு தரப்படுகின்ற மானியமான அந்தப் பெரிய தொகையை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டு விடைபெறுகின்றேன் என தெரிவித்தார்.





