சவால்கள் அனைத்தையும் முறியடித்து அபிவிருத்தியை நோக்கிச் செல்வோம்: அமைச்சர் அனில் ஜெயந்த
அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் நாட்டை வெற்றியை நோக்கி நகர்த்த முடியும் என்றார்.
எதிர்காலத்தில் எத்தகைய சவால்கள் ஏற்பட்டாலும், அவை அனைத்தையும் முறியடித்து நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்ல அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுன தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு அமைச்சின் செயலாளர் எஸ். எம். பியதிஸ்ஸ முன்னிலையில் 01-01-2026 அன்று நாரஹேன்பிட்டியிலுள்ள தொழில் அமைச்சில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் , கடந்த ஓராண்டு காலத்தில் மக்களால் வழங்கப்பட்ட மக்கள் ஆணையை நாம் மிகவும் பொறுப்புடன் கையாண்டுள்ளோம். இதன் மூலம் நாட்டின் நிதி ஒழுக்கத்தை உறுதிப்படுத்த முடிந்ததுடன், சரிவடைந்திருந்த பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பவும் எம்மால் முடிந்துள்ளது. எமது இந்த முறையான பொருளாதார கையாள்கையை சர்வதேச சமூகம் இன்று பாராட்டி வருகின்றது.
அண்மையில் நாட்டைப் பாதித்த 'டிட்வா' சூறாவளி அனர்த்தத்தின் போது அரசாங்கம் மேற்கொண்ட துரித கதியிலான மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் நேரடி வழிகாட்டலில் மக்கள் இயல்பு வாழ்வுக்கு திரும்பினர், அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் நாட்டை வெற்றியை நோக்கி நகர்த்த முடியும் என்றார்.
இதன்படி, மேற்கு வலய-01 தொழிலாளர் வலய அலுவலகம் மற்றும் கொழும்பு மத்தி, கொழும்பு தெற்கு, கொழும்பு கிழக்கு மற்றும் கொழும்பு வடக்கு ஆகிய மாவட்டங்களுக்கான தொழிலாளர் பணிமனைகள் உத்தியோகபூர்வமாக மக்கள் பயன்பாட்டிற்காகக் கையளிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் தொழிலாளர் ஆணையாளர் நாயகம் திருமதி நதீகா வட்டலியத்த உள்ளிட்ட அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.





