சிறுமி துஷ்பிரயோகம் தொடர்பில் நடவடிக்கை அவசியம் - தேசிய பெண்கள் ஆணைக்குழு
ஊடக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட சகலரும், சிறுமியின் தனியுரிமை, கண்ணியம், எதிர்காலம் மற்றும் நல்வாழ்வைப் பாதிக்கக்கூடிய எந்தவொரு தகவலையும் வெளியிடுவதைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும்.
சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு, அச்சம்பவத்துக்கான பொறுப்புக்கூறல் பற்றியது மாத்திரமல்ல. மாறாக அது பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களை இலங்கையின் குற்றவியல் நீதிக் கட்டமைப்பு எவ்வாறு நடத்துகிறது என்பது பற்றியதுமாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ள தேசிய பெண்கள் ஆணைக்குழு, இவ்விடயத்தில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, பொலிஸார், சட்டமா அதிபர் திணைக்களம், ஊடகங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட சகல தரப்பினரும் பொறுப்புவாய்ந்த முறையில் செயற்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
அண்மையில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய சம்பவத்துடன் தொடர்புடைய பாதிக்கப்பட்ட சிறுமியின் பாதுகாப்பு மற்றும் அச்சிறுமிக்கான நீதி உறுதிப்படுத்தப்படவேண்டியதன் அவசியம் என்பன தொடர்பில் தேசிய பெண்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
அண்மையில் சிறுமி ஒருவருக்கு நேர்ந்ததாகக் கூறப்படும் பாலியல் துஷ்பிரயோக சம்பவத்தில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய நீதி நிலைநாட்டப்படுவதை உறுதிசெய்வதுடன் மாத்திரமன்றி, சுதந்திரமானதும் பாரபட்சமற்றதுமான விசாரணைகளை முன்னெடுத்தல், பாதிக்கப்பட்டவர் மீது பழிசுமத்துவதைத் தடுத்தல் என்பன உள்ளடங்கலாக சகல தருணங்களிலும் சிறுமியின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டியது அவசியமாகும்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் இதுவரை எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகளை நாம் பாராட்டுகிறோம்.
இவ்வழக்கில் பொலிஸாரும், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையும் முக்கிய பங்காற்றியிருப்பதை அவதானிக்கும் அதேவேளை, இவ்விடயம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளின்போது அச்சிறுமியின் தனிப்பட்ட உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்கும் வகையில் சுயாதீனமான சட்டப் பிரதிநிதித்துவத்தை அச்சிறுமிக்குக் கிடைக்கப்பெறவேண்டும்.
துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு சிறுவர், சிறுமியரும் கண்ணியம், பாதுகாப்பு, சட்டத்தின்முன் சமத்துவம் என்பவற்றுக்கான உரிமை உண்டு. அரசியலமைப்பின் உறுப்புரை 12(1) இன் கீழும், நாட்டில் நடைமுறையில் உள்ள சிறுவர் பாதுகாப்புச் சட்டங்களின் கீழும், இலங்கையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறுவர் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பிரகடனத்தின் கீழும் மேற்குறிப்பிட்ட உரிமைகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன. அதேபோன்று அரசியலமைப்பின் உறுப்புரை 27(13) இன் கீழ் சிறுவர்களின் நலன்களைப் பாதுகாக்கவேண்டிய கடமை அரசாங்கத்துக்கு உண்டு என்பதுடன், சுரண்டல் மற்றும் பாகுபாடுகளிலிருந்தும் அவர்களைப் பாதுகாக்கவேண்டும்.
இவ்வாறானதொரு பின்னணியில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சிறுமிக்கான சட்ட மற்றும் உளவியல் ரீதியான பாதுகாப்பு தொடர்ந்து கிடைப்பதை உறுதிசெய்யவேண்டும். அத்தோடு அச்சிறுமி மீண்டும் அச்சுறுத்தல்கள் மற்றும் பழிசுமத்தப்படல் என்பவற்றுக்கு உள்ளாவதைத் தடுக்கவேண்டும்.
அதேவேளை இச்சம்பவத்துடன் தொடர்புடைய சகல விசாரணைகளும் எந்தவொரு செல்வாக்கும் தலையீடுகளுமின்றி, நியாயமான முறையில் நடைபெறுவதை பொலிஸார் உறுதிப்படுத்தவேண்டும்.
அதேபோன்று சட்டமா அதிபர் திணைக்களம் இவ்வழக்கின் உணர்திறனைக் கருத்திற்கொண்டு விசாரணை செயன்முறையை உன்னிப்பாகக் கண்காணிக்கவும், சகல நடவடிக்கைகளின்போதும் சிறுமியின் உரிமைகள், நலன்கள், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வைப் பாதுகாக்கவும் தம்மால் இயன்ற அனைத்தையும் செய்யவேண்டும்.
மேலும் ஊடக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட சகலரும், சிறுமியின் தனியுரிமை, கண்ணியம், எதிர்காலம் மற்றும் நல்வாழ்வைப் பாதிக்கக்கூடிய எந்தவொரு தகவலையும் வெளியிடுவதைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும்.
இந்த வழக்கு ஒரு சிறுமிக்கு எதிராக இடம்பெற்றதாகக் கூறப்படும் பாலியல் துஷ்பிரயோக சம்பவத்துக்கான பொறுப்புக்கூறல் தொடர்பானது மாத்திரமல்ல. மாறாக இது பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களை இலங்கையின் குற்றவியல் நீதிக் கட்டமைப்பு எவ்வாறு நடத்துகிறது என்பது பற்றியதுமாகும் என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





