சீன திட்டங்களை விமர்சித்தவர்கள் தற்போது முன்னெடுத்துச் செல்கின்றனர்: சாகர காரியவசம்
குறிப்பாக முப்பது ஆண்டுகால போர் முடிவுக்கு வந்த நிலையில் இலங்கை நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் சீனாவின் வகிபாகம் மிக முக்கியமானதாகும். அபிவிருத்தி திட்டங்களின் பட்டியல் நீண்டதாகும்.
சீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட முக்கியமான அபிவிருத்திட்டங்களை விமர்சித்தவர்கள் தற்போது அவற்றை முன்னெடுத்துச் செல்வதையிட்டும் அதன் பெறுமதியை உணர்ந்துகொண்டுள்ளமையும் மகிழ்ச்சி அளிப்பதாக பொதுஜனபெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
இலங்கைக்கு இரு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது மத்திய குழுவின் உறுப்பினரும், ஷிசாங் தன்னாட்சி பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட் கட்சி குழுவின் செயலாளருமான வாங் ஜுன்செங் தலைமையில் 20ஆவது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் நான்காவது முழுமையான அமர்வு குறித்த விளக்கவுரையை வழங்கும் நிகழ்வு 23-12-2025 அன்று ஷங்கிரிலா ஹோட்டலில் நடைபெற்றிருந்தது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்; இலங்கைக்கு, சீனாவுக்கும் இடையிலான நெருக்கமான உறவுகள் 1951ஆம் ஆண்டு அரிசி-இறப்பர் ஒப்பந்தத்திலிருந்து வலுவடைய ஆரம்பித்திருந்தது. இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மிகவும் வலுவாக ஆரம்பித்திருந்தன.
குறிப்பாக, இந்தக்காலப்பகுதியில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இலங்கைக்கு வருகைதந்திருந்ததோடு துறைமுக நகர அபிவிருத்தி திட்டத்தினை அங்குராட்பணம் செய்து வைத்திருந்தார். அதுமட்டுமன்றி பல்வேறு முக்கியமான அபிவிருத்தி திட்டங்கள் அக்காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக முப்பது ஆண்டுகால போர் முடிவுக்கு வந்த நிலையில் இலங்கை நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் சீனாவின் வகிபாகம் மிக முக்கியமானதாகும். அபிவிருத்தி திட்டங்களின் பட்டியல் நீண்டதாகும்.
இந்த அபிவிருத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட காலத்தில் பல்வேறு கடுமையான விமர்சனங்கள் வெளியிடப்பட்டன. குறிப்பாக சீனாவின் உதவியுடன் அத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமைக்கு விமர்சனங்களை வெளியிட்ட அரசியல் கட்சிகளும், தலைவர்களும் தற்போது அந்த திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதையிட்டு நாம் மகிழ்ச்சி அடைகின்றோம்.
அந்த வகையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் ஐந்தாண்டு கால அபிவிருத்திட்டமானது மிகவும் முக்கியம் பெறுகின்றது. அதியுச்சமான பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு இச்செயற்றிட்டத்தின் நடைமுறை அவசியமாகின்றது.
அந்த வகையில், குறித்த செயற்றிட்டமானது ஒருங்கே இலங்கையின் எதிர்காலத்துக்கும் முக்கியமானது என்பது மிகத்தெளிவாக புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது என்றார்.





