தமிழ் மக்களின் இருப்பை உறுதி செய்வதற்கு மாகாணசபை முறைமை அவசியமென புத்திஜீவிகள் வலியுறுத்து
மத்திய அரசாங்கத்தின் ஆட்சி இருக்கையில், பௌத்த தேரர்கள், மகாவலியினர், வன இலக்கா, வன பாதுகாப்பு திணைக்களத்தினர் தனித்தனி அரசாங்கங்களாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ள 13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைவாக உருவாக்கப்பட்டுள்ள மாகாண சபை முறைமையை செயல்வடிவத்துக்கு கொண்டுவருவதற்காக தமாதமின்றி தேர்தல் நடத்தப்படுவது அவசியமாகும். அதன் மூலமாகவே தமிழ் மக்கள் இருப்பதையாவது தக்கவைத்துக் கொள்ள முடியும் என்று புத்திஜீவிகள் வலியுறுத்தினர்.
கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் 04-04-2026 அன்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஏற்பாட்டில் 'மாகாணசபை முறைமையும் அதிகார பகிர்வும் கருத்தாடல் அரங்கு நடைபெற்றது. குறித்த கருத்தரங்கில் கூட்டணியின் தலைவர்களான சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ்பிரேமச்சந்திரன், முருகேசு சந்திரகுமார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர். இந்த கருத்தாடல் நிகழ்விலேயே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு: 'மாகாணசபை அதிகாரங்களும் சவால்களும்;' எனும் தலைப்பில் ஓய்வுநிலை மூத்த நிர்வாக அதிகாரியும், சமூக ஆய்வாளருமான இரேனியல் செல்வின் உரையாற்றுகையில், மக்களையும் அவர்களின் வாழ்வியலையும் இழந்துபோனால் அதன்பின்னர் யாருக்காகவும் அரசியல் உரிமையைக்கோரி போராட முடியாது. தமிழ்ர்களின் அரசியல் உரிமைக்கான போராட்டத்தில் தற்போதைய நிலையில் மாகாண சபை முறைமையை முன்னெடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால் மாகாண சபை முறைமை தான் எமது இறுதியான தீர்வு அல்ல. ஒட்டோமான் ஆட்சியில் பாலைவனத்தில் காணிகளை பெற்று மக்களை குடியேற்றினார்கள். அந்தச் செயற்பாட்டின் நீட்சியில் இஸ்ரேல் என்ற நாடு அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் 1948ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்டபோது அங்கே அவர்களுக்கான தேசம் உறுதி செய்யப்பட்டிருந்தது. யப்பானை அமெரிக்கா தாக்கியழித்தபோது அவர்கள் தோற்றுப்போனோம் என்று வெட்கப்படவில்லை. அதேஅமெரிக்காவின் கரத்தைப் பற்றிக்கொண்டு மாற்றுபாதையை தெரிவு செய்து பொருளாதார வல்லரசாக உருவெடுத்தார்கள். கொரிய போரில் தென்கொரியா சீரழிந்தபோதும் அது மீண்டெழுவதற்கு கண்டறிந்த ஒரேயொரு ஆயும் தொழில்நுட்பம். தமிழர்களின் வரலாற்றையொத்த வகையில் சுமத்திரா தீவில் உள்ள ஆச்சே என்ற சிறிய தீவில் தனிநாட்டுக்கோரிக்கை போராட்டம் காணப்பட்டது. சுனாமியில் ஒருஇலட்சத்துக்கும் அதிகமான போராளிகள் உயிரிழந்தார்கள். எதிர்காலமே இல்லாத நிலையில் ஆச்சே தீவு இந்தோனேஷிய அரசாங்கத்துடன் உரையாடி தங்களை ஒரு மாநிலமாக இணைத்துக்கொண்டு உரிமைகளைப் பெற்றுக்கொண்டார்கள். ஆகவே மாற்றுத்தெரிவுகள் பல வழிகளில் காணப்படுகையில் அவற்றை நாங்களே தெரிவு செய்ய வேண்டும் என்றார்.
'மாகாண சபையும், மலையக மக்களின் வாய்ப்புகளும்' எனும் தலைப்பில் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் நிறுவுனரும் சமூக ஆய்வாளருமான பெரியசாமி முத்துலிங்கம் உரையாற்றுகையில், மாகாண சபை முறைமையைப் பொறுத்தவரையில் மலையக மக்கள் பெற்றுக்கொண்டுள்ள அரசியல் உரிமையாகும். ஆரம்பகாலத்தில் அவர்கள் இலங்கைக்கு வரவழைக்கப்படும்போது இலங்கையில் உள்ள பிரஜைகளுக்கு சமாந்தரமான அந்தஸ்து அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. எனினும் அவ்விதமான அந்தஸ்து வழங்கப்படவில்லை. பின்னர் அவர்களின் பிரஜாவுரிமை கூட பறிக்கப்பட்டது. ஆரம்பத்தில் அவர்களை பிரதிநிதித்துவம் செய்து ஒரேயொரு மக்கள் பிரதிநிதி தான் இருந்தார். அவ்வாறான நிலையில் மாகாண சபை முறைமை அமலாக்கப்பட்டபோது 14 பிரதிநிதித்துவங்கள் கிடைத்தன. அந்தப் பிரதிநிதிகள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு காரணமாக இருந்தார்கள். ஆகவே அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதில் மாகாணசபை முறைமை முக்கிய பணியாற்றியது என்றார்.
'மாகாண சபை முறைமையும் தென்னிலங்கையின் தற்போதைய மனநிலையும்' எனும் தலைப்பில் ஆய்வாளர், கொள்கை பகுப்பாய்வாளருமான ஹரேந்திர பி. திசாநாயக்க உரையாற்றுகையில்,
மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படாது கிட்டத்தட்ட பத்தாண்டுகளாகப்போகின்றன. இந்தக்காலப்பகுதியில் மூன்று ஆட்சியாளர்கள் ஆட்சிப்பீடத்தில் ஏறியுள்ளார்கள். அதிலும் குறிப்பாக கிளிநொச்சி உட்பட வடக்கு மக்களில் 80சதவீதமானவர்கள் வாக்களித்து ஆட்சிபீடம் ஏறிய நல்லாட்சி அரசாங்கம் மிக முக்கியமானது அவர்களால் தான் தற்போது மாகாண சபை தேர்தல் நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
தற்போதைய ஆட்சியாளர்களும், ராஜபக்ஷக்களின் பொதுஜனபெர தரப்பினரும் தேசியவாதத்தை மையப்படுத்தியவர்கள். அவர்கள் மாகாண சபை என்பது சிங்கள மக்களை காட்டிக்கொடுக்கும் கட்டமைப்பு என்றே பிரசாரம் செய்கின்றர்கள். அதேநேரம் அரச உயர் நிர்வாக அதிகாரிகளைப் பொறுத்தவரையில் மக்களுக்கான அரச சேவை கிராம சேவர்கள் முதல் பிரதேச செயலாளர், மாவட்ட செயலாளர் என்று தடையின்றி கிடைக்கின்றதென்றால் எதற்கான மாகாண சபை என்ற நிலைப்பாடும் தென்னிலங்கையில் உள்ளது. அதாவது அதிகாரப்பரவலாக்கத்துக்கு அவர்கள் தயாராக இருக்கின்றபோதும் அதிகாரப்பகிர்வுக்கு அவர்கள் தயாரில்லை என்பதாகும். எவ்வாறாயினும் தற்போதும் நாட்டில் மாற்றத்தை கொண்டுவரவேண்டும் அரசியலமைப்பில் உள்ள அதிகாரப்பகிர்வை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளவர்களும் தெற்கில் உள்ளார்கள். வடக்கிலும் உள்ளார்கள். அவர்கள் இருதரப்பினரும் இணைந்து அதற்கான கதவுகள் மூடப்படாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.
'நிலையான தீர்வுக்கான படிக்கல்லாக மாகாண சபை' எனும் தலைப்பில் வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் உரையாற்றுகையில்,
மத்திய அரசாங்கத்தின் ஆட்சி இருக்கையில், பௌத்த தேரர்கள், மகாவலியினர், வன இலக்கா, வன பாதுகாப்பு திணைக்களத்தினர் தனித்தனி அரசாங்கங்களாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். மத்திய அரசாங்கம் இவ்வாறு தொடர்ச்சியாக செயற்படுவதற்கு காரணம், மாகாண சபை முறைமை காணப்படாமையாகும். தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் ஈரான் போரையும் பொருளாதார நெருக்கடிகளையும் காரணம் காண்பித்து தேர்தலை பிற்போடுவதையே முனைப்பாக கொண்டுள்ளார்கள். ஆனால் மாகாசபைகளுக்கான தேர்தல் எந்த தாமதமும் இன்றி நடத்தப்பட வேண்டும் என்றார்.
'மாகாண சபையும் இன்றைய அரசியல் சூழலும் எனும் தலைப்பில் தினக்குரல்' முன்னாள் பிரதம ஆசிரியர் வீரக்கத்தி தனபாலசிங்கம் உரையாற்றுகையில், வடமாகாணத்தைப் பொறுத்தவரையில் முழு நாட்டிலிலும் பரப்பளவின் அடிப்படையில் இரண்டாவது பெரியதாகும். ஆனால் அங்கு வாழும் மக்களின் தொகையானது பத்து இலட்சத்துக்கும் அதிகமாகக் கூட இல்லை. இதற்கு காரணம் இந்த மண்ணில் தொடர்ந்து வாழ்ந்தால் தமக்கு நல்லதொரு எதிர்காலம் இருக்குமா என்ற நம்பிக்கை அவர்களிடத்தில் காணப்படவில்லை. இதற்கு காரணம், அவ்விதமான நம்பிக்கையை ஊட்டும் வகையிலான அரசியல் செய்யப்படவில்லை. போர் நிறைவடைந்து 17வருடங்களாகின்ற நிலையில் தமிழர் தரப்பு பலவீனமடைந்த நிலையில் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். 13ஆவது திருத்தச்சட்டத்தினையும், மாகாண சபை முறைமையையும் நாம் அழுத்தமாக கோராது விட்டால் இந்தியாவுக்கோ பிரதமர் மோடிக்கோ அதுபற்றிய தேவை கிடையாது. ஆகவே உணர்ச்சியகரமான கோசங்களுக்குள் இருப்பதை விடுத்து நடைமுறையில் முன்னேற்றகரதமான தெரிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.





