'தித்வா' சூறாவளியினால் 277,000 விவசாயிகள் பாதிப்பு - உணவு மற்றும் விவசாய அமைப்பு
மீன்படி நடவடிக்கைகளுக்கு அவசியமான உபகரணங்கள் சேதமடைந்ததன் காரணமாக மீன்பிடித்துறையும் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது.
'தித்வா' சூறாவளியினால் சுமார் 277,000 விவசாயிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மீன்பிடித்துறையில் 20.5 மில்லியன் - 21.5 மில்லியன் ரூபாவுக்கு இடைப்பட்ட இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் ஐ.நா உணவு மற்றும் விவசாய அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
'தித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கிப் பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பேரனர்த்தத்தினால் விவசாயம், மீன்பிடி மற்றும் கிராமியப் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கள் தொடர்பான ஆரம்பகட்டத் தகவல்கள் அடங்கிய அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் முகவரமைப்பான உணவு மற்றும் விவசாய அமைப்பு வெளியிட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டின் பெரும்போகத்தை எதிர்பார்த்து பயிர்ச்செய்கையை மேற்கொண்ட மற்றும் பயிரிடுவதற்கு உத்தேசித்திருந்த விவசாயிகள் இப்பேரனர்த்தத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முதற்கட்ட மதிப்பீட்டின் பிரகாரம் டிசம்பர் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 106,000 ஹெக்டேயர் நெற்பயிர்ச்செய்கைக்கான விவசாய நிலங்கள் பகுதியளவிலோ அல்லது முழுமையாகவோ சேதமடைந்துள்னன. இது 2026 பெரும்போகத்தில் மொத்தமாக மேற்கொள்ளப்படும் நெற்பயிர்ச்செய்கையில் 20 சதவீதமாகும்.
இவ்வாறு பதிவாகியுள்ள சேதங்களில் பெரும்பாலானவை புத்தளம், குருணாகல், அம்பாறை, அநுராதபுரம், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பதிவானவையாகும்.
நெற்பயிர்ச்செய்கைக்கு அப்பால் சோளம், மரக்கறிகள், பெரிய வெங்காயம் மற்றும் பச்சைப்பயறு ஆகிய பயிர்ச்செய்கை நடவடிக்கைகளும் வெகுவாகப் பாதிப்படைந்துள்ளன.
சிறியளவு நெற்பயிர்ச்செய்கை விவசாயிகள் உள்ளடங்கலாக இப்பேரனர்த்தத்தினால் சுமார் 277,000 விவசாயிகள் பாதிக்கப்பட்டிருப்பதுடன், அதன் விளைவாக அவர்கள் பாரிய வாழ்வாதார இழப்புக்கு முகங்கொடுத்துள்ளனர்.
அதேபோன்று இவ்வனர்த்தத்தில் சிக்கி சுமார் 475,000 பறவைகளும், மாடு, எருமைமாடு, ஆடு மற்றும் பன்றி என்பன உள்ளடங்கலாக 50,000 க்கும் மேற்பட்ட விலங்குகளும் உயிரிழந்திருக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு மீன்படி நடவடிக்கைகளுக்கு அவசியமான உபகரணங்கள் சேதமடைந்ததன் காரணமாக மீன்பிடித்துறையும் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது.
அதற்கமைய மீன்பிடித்துறையில் ஏற்பட்டிருக்கக்கூடிய இழப்பு 20.5 - 21.5 மில்லியன் ரூபாவுக்கு இடைப்பட்டதாக இருக்கக்கூடும் என கணிப்பிடப்பட்டுள்ளது.





