'தேசிய கி யூ.ஆர் கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்' ஆரம்பம்
புதிய கட்டமைப்பை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி, பரிமாற்றங்களுடன் மிக நெருக்கமான ஒரு கலாசாரம் எமது சமூகத்தில் நிலவினாலும், அந்த பிணைப்பை பழைய காகித புத்தகத்திலிருந்து புதிய டிஜிட்டல் முறைமைக்கு மாற்ற நாம் இன்னும் தவறியுள்ளோம்.
இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லை குறிக்கும் வகையில், 'தேசிய கியூ.ஆர் கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்' ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
06-04-2026 அன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபா வரையிலான அனைத்து லங்காபே பரிமாற்றங்களுக்கும் வர்த்தகர்களிடம் வசூலிக்கப்படும் சேவைக்கட்டணம் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. புதிய முறைமையின் ஊடாக எந்த நிமிடமும் எந்த இடத்தில் இருந்தும் நபர்களுக்கு இடையிலான பண பரிமாற்றத்தை எளிதாக மேற்கொள்ள வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இலங்கையை நாணயங்கள் மற்றும் நாணயத் தாள்களின் பயன்பாடு குறைந்த பொருளாதாரத்தை நோக்கி நகர்த்துவதே இதன் முதன்மை நோக்கமாகும். இதற்கமைய நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5000 ரூபா வரையிலான அனைத்து லங்காபே கொடுக்கல் வாங்கல்களுக்காகவும் வர்த்தகர்களிடமிருந்து அறவிடப்படும் சேவை கட்டணத்தை முழுமையாக நீக்குவதற்கு நிதி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதன் மூலம் சிறு வர்த்தகர்கள் எவ்வித கூடுதல் செலவுமின்றி டிஜிட்டல் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது.
தற்போது இலங்கையில் மிகவும் வலுவான டிஜிட்டல் நிதி உட்கட்டமைப்பு காணப்படுவதுடன், நாட்டின் வயதுவந்த மக்களில் 89 சதவீதமானோருக்கு வங்கி வசதிகள் உள்ளன. மேலும், ஒரு காலாண்டில் 6.3 டிரில்லியன் ரூபா பெறுமதியான 68 மில்லியன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் கட்டமைப்பும், 20-க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் 450,000 வர்த்தக நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள லங்காபே கட்டமைப்பும் இன்று செயலில் உள்ளன.
பொருளாதாரத்தில் இன்னும் 1.48 டிரில்லியன் ரூபாய் பெறுமதியான நாணயத்தாள்கள் புழக்கத்தில் உள்ளன. 2025-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டு நிலவரப்படி, லங்காபே மூலம் மாதத்திற்கு சுமார் 395,000 ரூபா பெறுமதியான மிகக்குறைந்த அளவிலான கொடுக்கல் வாங்கல்களே இடம்பெற்றுள்ளன. இந்த இடைவெளியைக் குறைப்பதற்காக ஆர இத்திட்டத்தின் கீழ் சில விசேட மூலோபாயங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
அத்துடன், க்யூஆர் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்காக விசேட அதிர்ஷ்ட லாப போட்டித் திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது. இதில் வாராந்தம் மற்றும் மாதாந்தம் வெற்றிபெறும் முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு 1,000,000 ரூபா வரையிலான பெறுமதியான பரிசுகளை வெல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
இத்திட்டத்தின் வெற்றிக்காக சிங்களம்இ,தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தேசிய அளவிலான பிரச்சார நடவடிக்கைகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள 'சமூக கற்புல சுட்டெண்' மூலம் இத்திட்டத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் தொழில்நுட்ப ரீதியான ஒரு நடவடிக்கை மட்டுமல்லாது, நாட்டின் எதிர்கால கொடுப்பனவு முறையை டிஜிட்டல் மயப்படுத்தி,அனைவரையும் உள்ளடக்கிய ஒரு பொருளாதாரமாக மாற்றுவதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். க்யூ.ஆர் கொடுப்பனவுகள் ஆரம்பிக்கப்படுவதன் ஊடாக வேகமான, பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான டிஜிட்டல் பரிமாற்றம் பழக்கத்தை ஏற்படுத்தி எந்தப் பிரதேசத்தில் வாழ்ந்தாலும், எந்த மொழியைப் பேசினாலும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் பங்காளிகளாக்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.
புதிய கட்டமைப்பை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி, பரிமாற்றங்களுடன் மிக நெருக்கமான ஒரு கலாசாரம் எமது சமூகத்தில் நிலவினாலும், அந்த பிணைப்பை பழைய காகித புத்தகத்திலிருந்து புதிய டிஜிட்டல் முறைமைக்கு மாற்ற நாம் இன்னும் தவறியுள்ளோம். எனவே, மக்களுக்கு மிகவும் எளிதான மற்றும் வினைத்திறனான ஒரு முறையாக இந்தப் புதிய வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தி, அரசாங்கத்தின் இலக்குகளை அடைவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுத்தார்.
இந்நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதார விவகார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, அமைச்சின் செயலாளர்கள், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





