பௌத்த மகா சங்க மாநாட்டில் அரசியல் நோக்கமில்லை: முருத்தெட்டுவே ஆனந்த தேரர்
மூக ஊடகங்களில் பௌத்த மதத்திற்கு எதிராகவும், புத்தர் சிலைகளை அவமதிக்கும் வகையிலும் வெளியாகும் பதிவுகள் குறித்து எமது கடும் அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பௌத்த மகா சங்க மாநாடு எந்தவொரு அரசியல் நோக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்படவில்லை. இந்த மாநாட்டை நடத்துவதற்கான பிரதான நோக்கம் நாட்டின் கலாச்சாரம், மொழி மற்றும் நாகரிகத்தைப் பாதுகாப்பதேயாகும் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அகில இலங்கை பௌத்த மகா சம்மேளன அலுவலகத்தில் 19-02-2026 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், குறிப்பாக மிஹிந்து தேரர் கொண்டு வந்த பௌத்த விழுமியங்கள் தற்போது சிதைந்து வருகிறது. அதை அரச தலைவர்களுக்குச் சுட்டிக்காட்டவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது. மாறாக இதில் எமக்கு எவ்வித அரசியல் நோக்கமும் கிடையாது. பௌத்த மதத்தையோ அல்லது பௌத்த கலாச்சாரத்தையோ அழித்துவிட்டு எவராலும் இந்த நாட்டில் ஆட்சி செய்ய முடியாது.
தொல்பொருள் பெறுமதிமிக்க இடங்கள் ஆக்கிரமிக்கப்படுவது குறித்தும், பௌத்த உரிமைகள் பறிபோவது குறித்தும் நாம் எமது கவலையை வெளிப்படுத்துகின்றோம். கடந்த காலங்களில் சீகிரியா போன்ற இடங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளானபோது மகா சங்கத்தினர் தலையிட்டுப் பாதுகாத்ததை அவர் நினைவூட்ட விரும்புகின்றோம்.
சமூக ஊடகங்களில் பௌத்த மதத்திற்கு எதிராகவும், புத்தர் சிலைகளை அவமதிக்கும் வகையிலும் வெளியாகும் பதிவுகள் குறித்து எமது கடும் அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இத்தகையச் செயல்களைப் பார்த்துக்கொண்டு மகா சங்கத்தினர் அமைதியாக இருக்க முடியாது. இதற்கு அரச தலைவர்களே பொறுப்பேற்க வேண்டும்.
ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் அதற்குத் தயாராக இருக்கின்றோம். ஆனால் அதற்காக இந்த மாநாட்டை நிறுத்தப் போவதில்லை. எத்தனை தடைகள் வந்தாலும், பொலிஸார் மூலமாகவோ அல்லது சட்ட நடவடிக்கைகள் மூலமாகவோ அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும், பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கான இந்தப் பயணத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்றார்.





