மக்களுக்காக அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயற்பட நாங்கள் தயார் - மனோ கணேசன்
பெருந்தோட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக இடம்பெறும் வன்முறை மற்றும் அடாவடித்தன செயற்பாடுகள் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருடன் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் கலந்துரையாடினோம்.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் மலையகத்தில் வாழும் மக்கள் மீது தோட்ட நிர்வாகம் எவ்வித தாக்குதல்களையும் மேற்கொள்ள கூடாது என்ற தீர்மானத்தை எடுத்துள்ளோம். சட்டத்தை கையில் எடுக்கும் அதிகாரம் தோட்ட நிர்வாகத்துக்கு கிடையாது. பெருந்தோட்ட பகுதிகளில் இனி வன்முறை மற்றும் தாக்குதல்கள் இடம்பெறாது என்ற நம்பிக்கை தோற்றம் பெற்றுள்ளது. எமது மக்களுக்காக அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயற்பட நாங்கள் தயாராகவுள்ளோம். எதிர்க்கட்சியாக எமது பொறுப்பினை நிறைவேற்றுவோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 21-05-2026 அன்று நடைபெற்ற மலையக காணி உரிமை தொடர்பான அவசர சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது: மலையக மக்களின் பிரதிநிதிகளாக எமது மக்களின் அடிப்படை பிரச்சினைகளை வெளிப்படுத்துவது எமது பொறுப்பாகும். மக்கள் விடுதலை முன்னணி கடந்த காங்களில் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு தமது பிரச்சினைகளை அரசாங்கங்களின் கவனத்துக்கு கொண்டுச் சென்றது.பாராளுமன்றத்தின் ஊடாக எமது மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்தி அதற்கான தீர்வினை கோருகிறோம்.
தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற அடிப்படையில் நாங்கள் கடந்த காலங்களில் மலையகத்தில் தேங்காய் திருவவில்லை.பல அபிவிருத்தி பணிகளையும் நாங்கள் முன்னெடுத்துள்ளோம். நாங்கள் ஆரம்பித்த திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறோம். 7 பேச்சர்ஸ் காணி உரிமை திட்டத்தை ஆரம்பித்தோம். அது தற்போது 10 பேச்சர்ஸ் காணியாக மாற்றமடைந்துள்ளது. இந்திய வீட்டுத்திட்டத்தை ஆரம்பித்தோம்.அதனையும் தொடருங்கள் என்று கேட்கிறோம்.
நுவரெலியா மாவட்டத்தில் பல அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்தோம். 5 ஆக இருந்த பிரதேச சபையை 10 ஆக அதிகரித்தோம். மலையக மக்களின் உரிமைகளை சட்டத்தின் ஊடாக பெற்றுக்கொடுத்தோம்.பிரதேச சபை சட்டத்திலும் நாங்கள் மாற்றம் ஏற்படுத்தினோம்.பிரதேச சபைகளுக்கு இணையாக பிரதேச செயலகங்களையும் உருவாக்கியுள்ளோம்.
மலையக மக்களுக்கு அரச சேவைகள் நேரடியாக கிடைக்கும் அடித்தளத்தை நாங்கள் சட்டத்தால் உருவாக்கினோம்.மலையக பின்தங்கிய நிலையில் இருப்பதற்கு நாங்கள் காரணமல்ல, வரலாறே அதற்கு காரணம். அனைத்தையும் எம்மீது சுமத்த வேண்டாம். கறுப்பு வரலாறு தான் அனைத்துக்கும் காரணம். ஜே.பி.பியினரின் கடந்த கால செயற்பாடுகளினால் பல இன்னல்களை எமது மக்கள் எதிர்கொண்டார்கள்.இது தான் உண்மை.
அரசியல்,சமூக மற்றும் பொருளாதார கட்டமைப்பில் பின்தங்கியுள்ள மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காகவே நாங்கள் மலையக அபிவிருத்தி அதிகார சபையை கொண்டு வந்தோம்.ஆனால் இந்த அரசாங்கம் நிதி விடுவிப்பில் மலையக அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஓரவஞ்சனை காட்டுகிறது.சட்டத்தையும், அதிகாரத்தையும் முறையாக பயன்படுத்துங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தோட்ட நிர்வாகத்தின் கீழ் இருந்து தோட்ட வைத்தியசாலைகளை தேசிய வைத்திய கட்டமைப்பின் கீழ் கொண்டு வந்தோம். பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு தேவையான வகையில் 2 ஹேக்கர் காணியை சுவீகரிக்க முடியும் என்ற சட்டத்தை உருவாக்கியுள்ளோம். ஆகவே ஏதும் செய்யவில்லை என்று குறிப்பிட வேண்டாம். 200 வருடகால கொத்தடிமையை 5 ஆண்டுக்குள் முடிவுக்கு கொண்டு வர முடியாது என்பதையும் நாங்கள் அறிவோம்.
பெருந்தோட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக இடம்பெறும் வன்முறை மற்றும் அடாவடித்தன செயற்பாடுகள் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருடன் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் கலந்துரையாடினோம். பெருந்தோட்டத்தொழிலாளர்கள் மற்றும் அங்கு வாழும் மக்கள் மீது தோட்ட கம்பனிகள் எவ்வித தாக்குதல்களையும் மேற்கொள்ள கூடாது என்ற தீர்மானத்தை எடுத்துள்ளோம்.
தோட்ட நிர்வாகங்கள் ஏதுவாக இருந்தாலும் பொலிஸாருடன் ஒன்றிணைந்து நாட்டின் சட்டத்துக்கு அமைவாகவே செயற்பட வேண்டும் என்று வலுவாக வலியுறுத்தியுள்ளோம். சட்டத்தை கையில் எடுக்கும் அதிகாரம் தோட்ட நிர்வாகத்துக்கு கிடையாது. பெருந்தோட்ட பகுதிகளில் இனி வன்முறை மற்றும் தாக்குதல்கள் இடம்பெறாது என்ற நம்பிக்கை தோற்றம் பெற்றுள்ளது. எமது மக்களுக்காக அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயற்பட நாங்கள் தயாராகவுள்ளோம். எதிர்க்கட்சியாக எமது பொறுப்பினை நிறைவேற்றுவோம் என்றார்.





