மலையக மக்கள் நவீன கொத்தடிமைகளாகவே வாழ்கிறார்கள் - இராதாகிருஸ்ணன்
மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
டிஜிட்டல் யுகத்தில் நவீன கொத்தடிமைகளாகவே மலையக மக்கள் வாழ்கிறார்கள்.லயன் அறை முகவரியை மாற்றியமைக்க வேண்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அதற்கு ஹட்டன் பிரகடனத்தை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வி.இராதாகிருஸ்ணன் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் 21-05-2026 அன்று நடைபெற்ற மலையக காணி உரிமை தொடர்பான அவசர சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது: டிஜிட்டல் யுகத்தில் நவீன கொத்தடிமைகளாகவே மலையக மக்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கென்று முகவரி கிடையாது. ஆறாம் நம்பர் லயம், இரண்டாம் நம்பர் லயம் என்று தான் இன்றும் அவர்களுக்கு முகவரி வழங்கப்படுகிறது. உலகில் எந்த நாடுகளிலும் இவ்வாறான தன்மையை காண முடியவில்லை. இதனை அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
மலையகம் மற்றும் மலையக மக்கள் பற்றி இந்த அரசாங்கம் அதிகளவில் பேசுகிறது. பெருந்தோட்ட மக்களை தேசிய மக்கள் சக்தி தான் மலையக சமூகத்தினர் என்று பெயர் குறிப்பிட்டு அழைத்து.அது மகிழ்ச்சிக்குரியது. இன்னும் எத்தனை காலத்துக்கு லயன் அறைகளில் இருப்பது. மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
லயன் அறைகளை அகற்ற வேண்டுமாயின் அதற்கு ஒரு தீர்வுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தோட்ட கம்பனிகளுடனான ஒப்பந்தம் இன்னும் 15 ஆண்டுகளில் நிறைவுப்பெறவுள்ளது. அதன் பின்னர் தோட்ட தொழிற்றுறையை முடிவுக்கு கொண்டு வரும் தன்மையே காணப்படுகிறது.தோட்டத் தொழிற்றுறையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. ஹட்டன் பிரகடனத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும்.அப்போது பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஹட்டன்,தலவாக்கலை ஆகிய பகுதிகளுக்கு சென்று குறிப்பிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றார்.





