வேலை நிறுத்த போராட்டத்தை தீவிரப்படுத்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானம்
சுகாதார அமைச்சர் தொடர்ந்து தலைக்கனத்துடன் எமது கோரிக்கைகளைப் புறக்கணித்துச் செயல்பட்டு வருவதால், தன்னிச்சையாக வெளியிடப்பட்ட இடமாற்றப் பட்டியலை நிறுத்தும் வரை எமது போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை.
வைத்தியர்களின் இடமாற்ற நடைமுறையில் சிக்கல்கள் காணப்படுவதாகத் தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டம் தொடர்கின்றது. இன்று ஞாயிற்றுக்கிழமை கூடவுள்ள அந்த சங்கத்தின் நிறைவேற்றுக்குழுவில் எவ்வாறு போராட்டத்தை தீவிரப்படுத்துவது என்பது குறித்தும், அவசர மத்திய குழுவைக் கூட்டுவது தொடர்பிலும் தீர்மானிக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவிக்கையில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடு தழுவிய ரீதியில் இந்த தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்திருப்பதற்குக் பிரதான காரணம், வைத்தியர்களின் இடமாற்ற நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள அரசியல் தலையீடுகள் ஆகும். இந்த அரசியல் தலையீடுகளின் காரணமாக ஒட்டுமொத்த இடமாற்ற பொறிமுறைகளும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போது வெளியிடப்பட்டிருக்கின்ற உள்ளகப் பயிற்சியை நிறைவு செய்து நியமனத்திற்காகக் காத்திருக்கும் வைத்தியர்களுடைய பட்டியல் மற்றும் வைத்தியர்களுக்கான இடர் பிரதேச இடமாற்றப் பட்டியல் ஆகியவற்றில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. இந்த பட்டியல்கள் யாவும் இடமாற்ற சபையின் முறையான மற்றும் பூரண அனுமதி இன்றி, தன்னிச்சையாக அரசியல் தலையீடுகளினால் வெளியிடப்பட்டிருக்கின்றன.
சுகாதார அமைச்சும், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமும் மாத்திரமே இந்த இடமாற்ற சபையில் அங்கம் வகிக்கும் பங்குதாரர்களாக இருக்கின்றனர். சட்ட ரீதியாக ஒரு குறிப்பிட்ட தொழிலில் பணி புரிகின்றவர்களில் 15 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஒரு சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் பட்சத்தில், அந்த சங்கத்தின் பிரதிநிதிகளே இடமாற்ற சபையில் பங்கு பெற முடியும். வைத்தியர்களைப் பொறுத்தவரையில் நூற்றுக்கு 96 சதவீதமானவர்கள் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கின்ற காரணத்தால், இடமாற்ற சபையில் தொழிற்சங்கப் பிரதிநிதியாகப் பங்கேற்கும் ஒரே ஒரு அதிகாரம் மிக்க பங்குதாரராக எமது சங்கம் மட்டுமே திகழ்கிறது. எனவே, சங்கத்தின் பங்களிப்பு அல்லது அனுமதி இல்லாமல் இவ்வாறான எந்தவொரு இடமாற்றப் பட்டியலையும் வெளியிட முடியாது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பங்களிப்பு இன்றி, தனியே அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியல்கள் வெளியிடப்பட்டிருப்பது, நியமனங்களில் அரசியல் தலையீடு இருப்பதை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
வழக்கமாக வைத்தியர்களின் இடமாற்றங்கள் யாவும் அவர்களுடைய சிரேஷ்டத்துவம் மற்றும் திறமையின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டு வந்தன. எனவே, எக்காரணம் கொண்டும் வைத்தியர்களின் இடமாற்றங்களில் அரசியல் தலையீடுகள் ஏற்படுவதை சங்கம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை.
தற்போது சுகாதார அமைச்சினால் தன்னிச்சையாக வெளியிடப்பட்டுள்ள இந்த இடமாற்றப் பட்டியல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதும், அது மீண்டும் முழுமையான பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, இடமாற்ற சபையில் உள்ள பங்குதாரர்களின் முறையான அனுமதியுடன் மட்டுமே மறுபடியும் வெளியிடப்பட வேண்டும் என்பதும் எமது பிரதான கோரிக்கையாக இருக்கின்றது.
ஆனால், இந்த நியாயமான கோரிக்கைகளை உதாசீனம் செய்யும் வகையிலும் அலட்சியப்படுத்தும் விதமாகவும் சுகாதார அமைச்சர் ஆங்காங்கே பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்.
வைத்தியர்களுக்கான இடமாற்றம் மற்றும் அதற்கான பொறிமுறைகள் என்பவை அவர்களுக்குரிய அடிப்படை உரிமைகளாகும். அந்த உரிமைகள் பாதிக்கப்படுவதையோ அல்லது அதில் அரசியல் தலையீடுகள் நுழைவதையோ சங்கம் ஒருபோதும் வேடிக்கை பார்க்காது. சுகாதார அமைச்சர் நாட்டின் மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டவராக இருந்தால் மற்றும் மக்களுக்குத் தரமான, தடையற்ற சுகாதார சேவை கிடைக்க வேண்டும் என்று உண்மையாகவே விரும்பினால், அவர் தனது தலைக்கனத்தைக் கைவிட்டுவிட்டு எம்முடன் கலந்துரையாடலுக்கு வர வேண்டும். சங்கத்துடன் பேசி இந்த பிரச்சினைக்கு சுமுகமான தீர்வைக் காண அவர் முன்வர வேண்டும்.
சுகாதார அமைச்சர் தொடர்ந்து தலைக்கனத்துடன் எமது கோரிக்கைகளைப் புறக்கணித்துச் செயல்பட்டு வருவதால், தன்னிச்சையாக வெளியிடப்பட்ட இடமாற்றப் பட்டியலை நிறுத்தும் வரை எமது போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை. போராட்டத்தைத் தொடர்வது என்று ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது.
அடுத்தகட்டமாக சங்கத்தின் அவசர மத்திய குழுவைக் கூட்டி, இந்த தொழிற்சங்கப் போராட்டத்தை எவ்வாறு தீவிரப்படுத்தலாம் மற்றும் எந்தெந்த வழிகளில் முன்னெடுத்துச் செல்லலாம் என்பது குறித்தே ஆலோசிக்கப்பட இருக்கிறது. அரசுக்கு எதிராகக் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு செல்வதைத் தவிர வேறு வழியில்லை. உரிய தீர்வு கிடைக்கும் வரை எமது போராட்டம் ஓயாது என்றார்.





