‘இலங்கையை மீளக்கட்டியெழுப்பல்' நிதியத்துக்குசிவில் சமூக பிரதிநிதிகள்
கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் இந்நிதியம் ஸ்தாபிக்கப்பட்ட வேளையில் அதில் பெருவணிகர்களே உள்வாங்கப்பட்டிருப்பது குறித்தும், பெண் பிரதிநிதிகள் நியமிக்கப்படாமை குறித்தும் பல்வேறு தரப்பினரும் கரிசனைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
இலங்கையின் அண்மைய வரலாற்றில் பதிவான மிகமோசமான இயற்கைப் பேரழிவுகளில் ஒன்றான 'தித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட பெரும் சேதத்தைத் தொடர்ந்து, நாட்டை மீளக்கட்டியெழுப்புவதைப் பிரதான நோக்காகக்கொண்டு நிறுவப்பட்ட 'இலங்கையை மீளக்கட்டியெழுப்பல்' நிதியத்துக்கு சிவில் சமூகப்பிரதிநிதிகள் சிலரை நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக சிவில் சமூக வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது.
மேற்கூறப்பட்ட நோக்கத்துக்காக அரச மற்றும் தனியார் துறைகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கி, ஜனாதிபதி செயலகத்தின்கீழ் ஒரு சட்டபூர்வ நிதியமாக இயங்கும் வகையில் ஸ்தாபிக்கப்பட்ட 'இலங்கையை மீளக்கட்டியெழுப்பல்' நிதியத்தின் தலைவராக தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதியமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோவும், அதன் ஒருங்கிணைப்பாளராக ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஜி.எம்.ஆர்.டி.அபொன்சுவும் செயற்பட்டுவருகின்றனர்.
அதேபோன்று அந்நிதியத்தின் உறுப்பினர்களாக வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியும் மேல்மாகாண ஆளுநருமான ஹனீஃப் யூஸுப், நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சுகீஸ்வர குணவர்தன, ஹேலிஸ் குழுமத்தின் தலைவர் மொஹான் பண்டிதகே, ஜோன் கீல்ஸ் நிறுவனத் தலைவர் கிரிஷான் பாலேந்திரன், எட்கன் ஸ்பென்ஸ் உபதலைவர் மற்றும் முகாமைத்துவப்பணிப்பாளர் கலாநிதி பராக்கிரம திஸாநாயக்க, பிரண்டெக்ஸ் குழுமத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி அஷ்ரஃப் ஒமர், எல்.ஓ.எல்.சி நிறுவனத்தின் நிறைவேற்றுத்தலைவர் இஷார நாணயக்கார ஆகியோர் இயங்கிவருகின்றனர்.
இருப்பினும் கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் இந்நிதியம் ஸ்தாபிக்கப்பட்ட வேளையில் அதில் பெருவணிகர்களே உள்வாங்கப்பட்டிருப்பது குறித்தும், பெண் பிரதிநிதிகள் நியமிக்கப்படாமை குறித்தும் பல்வேறு தரப்பினரும் கரிசனைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் இந்நிதியத்துக்கு சிவில் சமூகப்பிரதிநிதிகள் சிலரை நியமிப்பது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாகவும், அதனை முன்னிறுத்தி சிவில் செயற்பாட்டாளர்கள் சிலருடன் கலந்துரையாடி வருவதாகவும் சிவில் சமூக வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது.





