அமெரிக்காவினால் வழங்கப்பட்ட நான்காவது கப்பல் இலங்கை நோக்கி பயணமானது
அமெரிக்கா வழங்கிய இந்த நான்காவது கப்பல், இலங்கை கடற்படையின் பலத்தை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படை வரலாற்றில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், முன்னதாக அமெரிக்க கடலோர பாதுகாப்புப் படையின் ‘Decisive’ கப்பல் என அழைக்கப்பட்ட பி 628 கப்பல், அமெரிக்காவின் பால்டிமோர் கடலோர பாதுகாப்புத் தளத்திலிருந்து 20-02-2026 அன்று இலங்கை நோக்கிப் புறப்பட்டது.
இக்கப்பல் சுமார் 14,775 கடல் மைல் தூரத்தை கடக்கவுள்ளது. இது இலங்கை கடற்படைக் கப்பல் ஒன்று மேற்கொள்ளும் மிக நீண்ட ஒற்றை கடல் பயணமாகும். பனாமா கால்வாய் ஊடாக பயணிக்கும் முதலாவது இலங்கை கடற்படைக் கப்பலும் இதுவாகும்.
கப்டன் கயான் விக்ரமசூரியவின் தலைமையில், 14 அதிகாரிகள் உட்பட 86 பேர் கொண்ட உயர் பயிற்சி பெற்ற இலங்கை கடற்படை குழுவினர் இக்கப்பலில் பயணிக்கின்றனர். மூலோபாய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பல துறைமுகங்களில் தரித்துச் செல்லும் இக்கப்பல், 77 நாட்கள் பயணத்தை நிறைவு செய்து, மே 8 ஆம் திகதி திருகோணமலையை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா வழங்கிய இந்த நான்காவது கப்பல், இலங்கை கடற்படையின் பலத்தை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல், பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு பங்களிப்பு செய்தல் என்பன இதன் நோக்கங்களாகும்.
அமெரிக்காவின் இந்த நன்கொடையானது, அமெரிக்கா மற்றும் இலங்கை இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளையும், கடல்சார் பாதுகாப்பிற்கான பரஸ்பர அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.





