இலத்திரனியல் விசா விநியோக முறைமை 17ஆம் திகதிக்கு முன்னர் இறுதி அறிக்கை
இலத்திரனியல் வீசா விநியோக முறைமை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் 08 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இலத்திரனியல் விசா விநியோக முறைமை தொடர்பில் கணக்காய்வாளர் திணைக்களம் விசேட கணக்காய்வினை மேற்கொண்டு அந்த வரைவு இறுதி மதிப்பீடு மற்றும் கண்காணிப்புக்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் இறுதி மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு அறிக்கை 2025.09.17 ஆம் திகதிக்கு முன்னர் கணக்காய்வாளர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படுமென பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் 12-09-2025அன்று நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்களின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன முன்வைத்த கேள்விகளுக்கான விடையை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால சபைக்கு சமர்ப்பித்தார்.
அந்த விடை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஜி.பி.எஸ் தொழில்நுட்ப சேவை மற்றும் ஐவிஸ் குளோபல் மற்றும் வி.எப் நிறுவனம் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கத்துக்கு இடையில் நிகழ்நிலை முறைமை ஊடாக விசா விநியோக சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் 2024.07.12 ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட அறிக்கை (1:10) பிரகாரம் தடயவியல் கணக்காய்வினை மேற்கொள்ளுமாறு கணக்காய்வாளர் திணைக்களம் பணிப்புரை விடுத்துள்ளது.
கணக்காய்வாளர் திணைக்களம் இவ்விடயம் தொடர்பில் விசேட கணக்காய்வினை மேற்கொண்டு அந்த வரைவை இறுதி மதிப்பீட்டுக்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் இறுதி மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு அறிக்கை 2025.09.17 ஆம் திகதிக்கு முன்னர் கணக்காய்வாளர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்த இலத்திரனியல் வீசா விநியோக முறைமை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் 08 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இந்த வழக்குகள் தற்போது நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பினை அடிப்படையாகக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்





