தொலைபேசி காணாமல் போனால், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்
காணாமல் போன அல்லது திருடப்பட்ட தொலைபேசி குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யும்போது, சர்வதேச மொபைல் உபகரண அடையாள (IMEI) இலக்கத்தைக் குறிப்பிடுவது கட்டாயமாகும்.
தொலைபேசிகள் காணாமல் போதல், தவறவிடப்படுதல் மற்றும் திருடப்படுதல் தொடர்பான முறைப்பாடுகள் நாளாந்தம் பதிவாகி வருவதாகத் தெரிவித்துள்ள இலங்கை பொலிஸார், இத்தகைய சாதனங்கள் அங்கீகரிக்கப்படாத நபர்களின் கைகளுக்குச் சென்றால் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்படும் என எச்சரித்துள்ளனர்.
காணாமல் போன அல்லது திருடப்பட்ட தொலைபேசிகள் சமூக விரோத மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க பொதுமக்கள் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள விழிப்புணர்வு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : இதுவரை கிடைத்துள்ள முறைப்பாடுகளின் அடிப்படையில், நிதி விபரங்கள், தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் ஏனைய இரகசிய ஆவணங்கள் உள்ளிட்ட முக்கியமான தரவுகளைக் கொண்டுள்ள தொலைபேசிகளை, குற்றவாளிகள் தங்களது சட்டவிரோத நோக்கங்களை அடைவதற்கும், மோசடி மற்றும் துன்புறுத்தல் போன்ற குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்துவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிகாட்டல்கள் உள்ளன. அதற்கமைய முதலில் தொலைபேசி காணாமல் போனவுடன், அதனைப் பெற்றுக் கொண்ட சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு சேவை வழங்குனர் மூலம் சிம் அட்டையை உடனடியாக செயலிழக்கச் செய்ய வேண்டும். இது மூன்றாம் தரப்பினர் தொலைபேசியைச் சட்டவிரோத செயல்களுக்குப் பயன்படுத்துவதைத் தடுப்பதுடன், சாதனம் வேறொருவரின் வசம் இருக்கும் பட்சத்தில் அதனை மீட்டெடுக்கும் செயல்முறையையும் எளிதாக்குகிறது.
காணாமல் போன அல்லது திருடப்பட்ட தொலைபேசி குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யும்போது, சர்வதேச மொபைல் உபகரண அடையாள (IMEI) இலக்கத்தைக் குறிப்பிடுவது கட்டாயமாகும். தொலைபேசி பயனர்கள் தங்களது சாதனத்தின் IMEI இலக்கம் மற்றும் சேவை விபரங்களை முன்கூட்டியே பாதுகாப்பாக குறித்து வைத்திருக்க வேண்டும். தொலைபேசியில் *#06# என டயல் செய்வதன் மூலம் இந்த IMEI இலக்கத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
தொலைபேசிகளைக் கண்டறிவதற்காக இலங்கை பொலிஸார் மென்பொருள் அடிப்படையிலான அமைப்பொன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். பொதுமக்கள் ineed.police.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று தங்களது விபரங்களைப் பதிவு செய்ய முடியும். அதன் பின்னர் பொலிஸாரால் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இதேவேளை, கடந்த 2024 ஆம் ஆண்டில் பொலிஸாரால் 2,796 காணாமல் போன தொலைபேசிகள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட 928 தொலைபேசிகள் தொடர்பில் சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2025ஆம் ஆண்டில் காணாமல் போன 2355 தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட தொலைபேசிகளை வைத்திருந்த 1019 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாரேனும் ஒருவருக்குச் சொந்தமில்லாத தொலைபேசி அல்லது பொருள் கிடைத்தால், அதனை உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து அதற்கான ரசீதைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பிறரின் சொத்தை சட்டவிரோதமாகத் தன்வசம் வைத்திருப்பது இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் 'குற்றவியல் முறைகேடு' என்ற குற்றச்சாட்டின்கீழ் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும்.
அதேபோல், திருடப்பட்ட தொலைபேசிகள் அல்லது பொருட்களைக் குறைந்த விலைக்குத் தெரிந்தே வாங்கி வைத்திருக்கும் நபர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். எனவே, புதிய அல்லது பாவித்த தொலைபேசிகளை வாங்குவதற்கு முன்னர், 'I Need' அமைப்பில் உள்ள "Find Genuine Phone" என்ற வசதியின் மூலம் அந்தச் சாதனம் திருடப்பட்டதா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.





