நிலக்கரி மோசடியை கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது
அவசரத் தேவைக்காக அதிக விலைக்கு நிலக்கரியை கொள்வனவு செய்ததன் மூலம் மேலும் பல கோடி ரூபாய் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை நிலக்கரி மோசடியை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறது. தகுதியற்ற நிறுவனங்களிடமிருந்து தரம் குறைந்த நிலக்கரியை அதிக விலைக்கு கொள்வனவு செய்ததன் மூலம் மின்சார சபைக்கும் மக்களுக்கும் பாரிய நட்டம் விளைவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடியால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, அதன் சுமையை மக்கள் மீது சுமத்தும் வகையில் மின்சாரக் கட்டணத்தை மீண்டும் உயர்த்தும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக நிலக்கரி கொள்வனவில் பாரிய ஊழல் இடம்பெற்று வருகிறது. இதன் காரணமாக மின் நுகர்வோர் பெரும் அநீதிக்கு உள்ளாக்கப்படுகின்றனர். உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக, பல அரச நிறுவனங்களின் அதிகாரிகளை அழைத்துத் தரவுகளை ஆய்வு செய்ததன் மூலம் இந்த மோசடி அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் 101ஆவது பக்கத்தில் உள்ள 6.2.1 பந்தியில், இறக்குமதி செய்யப்பட்ட ஒன்பது கப்பல்களில் உள்ள நிலக்கரியின் தரம் குறித்து பகிரங்கமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த நிலக்கரியை விநியோகித்த நிறுவனம், விலைமுறி கோரப்பட்ட காலத்தில் முறையாகப் பதிவு செய்யப்படாததாகும். அந்த நிறுவனம் செலுத்த வேண்டிய 5,000 டொலர் வைப்புத் தொகையை கால தாமதமாகவே செலுத்தியுள்ளது.
நிலக்கரியின் தரம் குறித்து ஆய்வு செய்த நிறுவனங்கள் முறையான அங்கீகாரம் பெறாதவை என்பதை கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்ட போது, அங்கீகரிக்கப்படாத இந்தோனேசிய நிறுவனமே தரப் பரிசோதனை அறிக்கைகளை வழங்கியுள்ளது. மேலும், லக்விஜய மின்நிலையத்தின் கொதிகலன்களில் இந்த நிலக்கரியைப் பயன்படுத்தும்போது, எதிர்பார்க்கப்பட்ட மின்சாரம் உற்பத்தி செய்யப்படவில்லை.
தரம் குறைந்த நிலக்கரியை விநியோகித்த நிறுவனங்கள் விலைமுறியில் பங்கேற்க வசதியாக, தகுதிக்கான நிபந்தனைகள் வேண்டுமென்றே தளர்த்தப்பட்டன. அதாவது, கடந்த 36 மாதங்களில் குறிப்பிட்ட அளவிலான நிலக்கரியை விநியோகித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை குறைக்கப்பட்டதன் மூலம், தகுதியற்ற நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 5,900 கிலோ கலோரி வெப்ப வலுவைக் கொண்ட நிலக்கரிக்கு பதிலாக, அதற்குக் குறைவான தரம் கொண்ட நிலக்கரியே இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த மோசடியால் மின்சார சபைக்கு பில்லியன் கணக்கில் நட்டம் ஏற்பட்டுள்ளது. ஒன்பது கப்பல்களில் வந்த தரம் குறைந்த நிலக்கரியால் சுமார் 11,000 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது. கப்பல்கள் தாமதமானதற்கான தாமதக் கட்டணமாக பெருமளவு டொலர்கள் விரயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், அவசரத் தேவைக்காக அதிக விலைக்கு நிலக்கரியை கொள்வனவு செய்ததன் மூலம் மேலும் பல கோடி ரூபாய் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, தரம் குறைந்த நிலக்கரியால் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், மின்வெட்டு தவிர்க்க முடியாதது. இதனை மறைக்க அரசாங்கம் டீசல் மூலம் அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்வனவு செய்வதால் விரைவில் மின்சாரக் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்படும் அபாமுள்ளது. இந்த நிலக்கரி மோசடி தற்போது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.





