பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக்கொள்ள முடியாது: சபாநாயகர்
அரசியலில் ஈடுபடும் தரப்பினர்கள் சகலருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வர முடியும்.இவ்விரு அறிக்கைகளின் உள்ளடக்கம் எமக்கு தெரியாது. இந்த நம்பிக்கையில்லா பிரேரணையால் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை சட்ட சிக்கல் இல்லை என்று சட்டமா அதிபர் தங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அறிய முடிகிறது.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற முன்னுதாரணங்களுக்கு முரணான ஒரு விரும்பத்தகாத முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். அனைத்து விடயங்களையும் கருத்தில் கொண்டு, பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஒழுங்கற்றது மற்றும் அதனை தற்போதைய வடிவத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது என சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபைக்கு அறிவித்தார்.
சபாநாயகரின் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திய எதிர்க்கட்சி தலைவர் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பாராளுமன்ற செயலாளர் அலுவலக சபை சமர்ப்பித்த அறிக்கையை சபைக்கு சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தினார்.
சபாநாயகர் பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தையும் எதிர்க்கட்சிகளின் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும். முறையற்ற வகையில் செயற்பட்டால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வர முடியும் என்று ஐக்கிய மக்களின் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை நோக்கி குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் 10-09-2025அன்று நடைபெற்ற அமர்வின் போது சபைக்கு அறிவிப்பை விடுத்த சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, 12.08.2025 ஆம் திதியன்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) அருண ஜெயசேகரவுக்கு எதிராக,எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிர்க்கட்சியைச் சேர்ந்த 32 பாராளுமன்ற உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்ட 'நம்பிக்கையில்லாத் பிரேரணை தொடர்பாக, 19.08.2025 ஆம் திகதியன்று சபைக்கு வெளியிட்ட அறிவிப்பின் தொடர்ச்சியாக இந்த அறிவிப்பை விடுக்கிறேன்.
அரசியலமைப்பின் விதிகள், பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் மற்றும் பாராளுமன்ற நடைமுறைகள் மற்றும் முன்னுதாரணங்களின் அடிப்படையில், இந்தப் பிரேரணையை நான் கவனமாகப் பரிசீலித்துள்ளேன். இந்தியாவின் மக்களவை மற்றும் ஆஸ்திரேலியாவின் பிரதிநிதிகள் சபை போன்ற பிற காமன்வெல்த் மற்றும் ஜனநாயக சட்டங்களில் இது தொடர்பாகப் பின்பற்றப்படும் மரபுகள் மற்றும் நடைமுறைகளையும் ஆய்வு செய்தேன்.
அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டு வரப்படலாம் என்பதை அரசியலமைப்பு தெளிவாக அங்கீகரிக்கிறது. அதே நேரத்தில் பிரதமர் அல்லது ஒரு தனிப்பட்ட அமைச்சரவை அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானங்களை முன்னுதாரணமாக அங்கீகரிக்கிறது. ஆனால் பிரதி அமைச்சருக்கு எதிராக அத்தகைய தீர்மானத்திற்கு எந்த ஏற்பாடும் இல்லை.எனவே, இன்று அத்தகைய தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அது அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற முன்னுதாரணங்களுக்கு முரணான ஒரு விரும்பத்தகாத முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்.
அதன்படி, இந்த அனைத்து விடயங்களையும் கருத்தில் கொண்டு, பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஒழுங்கற்றது மற்றும் அதன் தற்போதைய வடிவத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை இந்த சபைக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். என்றார்.
இதன்போது ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து உரையாற்றிய எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக,பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூட்டத்தில் இவ்விடயம் குறித்து தங்களிடம் வினவிய போது இவ்விடயம் தொடர்பில் செயலாளர் சபையில் அறிக்கைக் கோரப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டீர்கள்.
அதேபோல் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இந்த பிரேரணை இடையூறாக அமையுமா என்பது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஆலோசனை கோரியுள்ளதாக குறிப்பிட்டீர்கள். தங்களுக்கு இவ்விரு தரப்பில் இருந்தும் அறிக்கைகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
அரசியலில் ஈடுபடும் தரப்பினர்கள் சகலருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வர முடியும்.இவ்விரு அறிக்கைகளின் உள்ளடக்கம் எமக்கு தெரியாது. இந்த நம்பிக்கையில்லா பிரேரணையால் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை சட்ட சிக்கல் இல்லை என்று சட்டமா அதிபர் தங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அறிய முடிகிறது. அத்துடன் செயலாளர் சபையின் அறிக்கையின் உள்ளடக்கம் என்னவென்பதும் எமக்கு தெரியாது .ஆகவே இவ்விரு அறிக்கைகளையும் சபைக்கு சமர்ப்பியுங்கள் என்று வலியுறுத்துகிறேன் என்றார்.
இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, பாராளுமன்ற நிலையியற் கட்டளை, கோட்பாடுகள் மற்றும் மரபுவழி தீர்மானங்கள் உட்பட சர்வதேச பாராளுமன்ற ஒழுங்குவிதிகள் ஆகியவற்றை பரிசீலனை செய்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. சட்டமா அதிபரின் அறிக்கை, செயலாளர் சபையின் அறிக்கையை சபைக்கு சமர்ப்பிப்பது தொடர்பில் பரீசீலிக்கிறேன் என்றார்.
இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இவ்விடயம் தொடர்பில் எமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வாய்ப்பளியுங்கள். பிரதி அமைச்சர் என்பவர் நிறைவேற்று அதிகாரத்தின் ஒரு பகுதியாகும் .ஆகவே அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வர முடியும். சட்டமா அதிபர் வழங்கிய அறிக்கையை நாங்கள் ஆராய வேண்டும்,ஆகவே அதனை சபைக்கு சமர்ப்பியுங்கள் என்றார்.
இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, ஏதேனும் விடயம் தொடர்பில் சபாநாயகர் சபைக்கு அறிவித்ததன் பின்னர் அதனை விவாதிக்க முடியாது. பாராளுமன்ற நிலையியல் கட்டளையில் அவ்வாறு ஏதும் குறிப்பிடப்படவில்லை. இந்த பிரேரணை தொடர்பில் எச்சந்தர்ப்பத்திலும் விவாதிக்க அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் தயாராகவே உள்ளோம்.
இருப்பினும் இது பாராளுமன்ற நிலையியல் கட்டளைக்கும்,அரசியலமைப்புக்கும் இணக்கமானதா என்பதை ஆராயும் பொறுப்பு சபாநாயகருக்கு உண்டு. இந்த பிரேரணையை எதிர்கட்சியினர் பிறிதொரு வடிவில் கொண்டு வருவார்களாயின் எமக்கு எவ்வித பிரச்சினையுமில்லை.
பாராளுமன்றத்துக்கு ஒரு பிரேரணையை கொண்டு வருவதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகள் உண்டு. முறையான வழியில் கொண்டு வந்தால் உரிய நடவடிக்கை எடுப்போம்.இந்த பிரேரணைக்கு இடமளிக்காவிடின் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதாக ரஞ்சித் மத்தும பண்டார அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இதுவா ஜனநாயகம் சபாநாயகரை பதவி நீக்க இவர்களால் முடியாது. எதிர்க்கட்சியின் தலைவரின் நிலைப்பாடு இதுவா. சபாநாயகருக்கு அச்சுறுத்துவது முறையா. பாராளுமன்ற கோட்பாடு அமைவாக அருண ஜயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வாருங்கள் என்றார்.
இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், எவ்விதான முழுமையான முன்னறிவித்தலுமில்லாமல் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான அறிவிப்பை விடுத்துள்ளமை முற்றிலும் தவறானது என்றார்.
இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தாங்கள் (சபாநாயகர்) பாராளுமன்றத்தினதும், எதிர்க்கட்சிகளினதும் ஜனநாயகம் மற்றும் உரிமைகளை பாதுகாக்காவிடின் உங்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர நேரிடும்.
பாராளுமன்ற வரலாற்றில் முதன் முறையாகவே நம்பிக்கையில்லா பிரேரணையொன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. 1978 ஆம ஆண்டு அப்போதைய எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது. ஆகவே ஒருதலைப்பட்சமாக செயற்படாதீர்கள் என்றார்.
சபாநாயகரின் அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.





