மத்தலவை பிராந்திய விமான போக்குவரத்து மத்திய நிலையமாக மாற்றுவதற்கு திட்டம்
மத்தல சர்வதேச விமான நிலையத்தை விமானப் போக்குவரத்துத் துறைக்கு உகந்த வகையில் அபிவிருத்தி செய்ய திட்டதிட்டுள்ளோம்.
இலங்கையின் மூலோபாய அமைவிடம் காரணமாக மத்தல சர்வதேச விமான நிலையத்தை பிராந்திய விமானப் போக்குவரத்து மையமாக மாற்றுவதற்கான அதிகமான சாத்தியக்கூறுகள் உள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்துடன் தொடர்புடைய முதலீட்டு வாய்ப்புகளுக்காக கோரப்பட்டுள்ள விருப்பப் பிரகடனங்களுக்கான முன்மொழிவுக்கு முந்தைய சந்திப்பு மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும்போதே பிரதி அமைச்சர் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், மத்தல சர்வதேச விமான நிலையத்தை விமானப் போக்குவரத்துத் துறைக்கு உகந்த வகையில் அபிவிருத்தி செய்ய திட்டதிட்டுள்ளோம். கடந்த காலங்களில் உருவெடுத்திருந்த சில சவால்களுக்கு தீர்வுகளை வழங்கி, விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளை முறையாக அபிவிருத்தி செய்தல், பாதுகாப்பு வழிமுறைகளை பலப்படுத்துதல் மற்றும் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்குதல் என்பவற்றுக்காக புதிய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் காரணமாக, இம்முறை முதலீட்டாளர்களிடம் கணிசமான ஆர்வமும் சாதகமான பிரதிபலிப்பும் காணப்படுகிறது.
இலங்கையின் மூலோபாய ரீதியிலான புவியியல் அமைவிடம் காரணமாக, மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை பிராந்திய விமானப் போக்குவரத்து மத்திய நிலையமாக மாற்றுவதற்கான பெரும் சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது. அத்துடன், ஒரு நவீன விமான நிலையம் என்பது வெறும் பயணியர் போக்குவரத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், முதலீடுகள், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் பிராந்திய பொருளாதார அபிவிருத்தியின் கேந்திர நிலையமாக மாறியுள்ளது என்றார்.





