சுமைகளை அதிகரிக்கும் பொருளாதார யதார்த்தம்
தேசிய மக்கள் சக்தியைப் பொறுத்தவரையில் ஆட்சி அதிகாரம் தொடர்பில் அனுபவமற்ற தன்மையும், அரச அதிகாரிகளின் முழுமையான ஒத்துழைப்பின்மையும் நிருவாகத்தை முன்னெடுப்பதில் நெருக்கடிகளை தோற்றுவித்த வண்ணமுள்ளன.
இலங்கையின் தற்போதைய பொருளாதாரச் சூழல், சர்வதேச அரசியல் கொந்தளிப்புகளுக்கும் உள்நாட்டு நிர்வாகக் கொள்கைகளுக்கும் இடையிலான கடுமையான போராட்டக் களமாக மாறியிருக்கிறது.
நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளியிட்ட எண்கள், நாடு மீண்டும் பொருளாதார நெருக்கடியின் விளிம்பில் நிற்கிறதோ என்ற அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த பெப்ரவரி மாதத்திற்குப் பின்னர் நாட்டின் எரிபொருள் இறக்குமதிச் செலவு 6 மடங்காக அதிகரித்திருப்பதாக ஜனாதிபதி புள்ளிவிபரக் குண்டை வீசியுள்ளார். எனினும், அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகள், மத்திய வங்கி மற்றும் பொருளியல் வல்லுநர்களின் உத்தியோகபூர்வத் தரவுகளை ஆழமாக ஆராயும்போது, இந்த விவகாரத்தில் உண்மையான பொருளாதார அழுத்தங்களைத் தாண்டி, அரசியல் ரீதியான மிகைப்படுத்தல்களும், முரண்பட்ட கருத்துகளும் மலிந்து கிடப்பது தெளிவாகப் புலனாகிறது.
மத்திய கிழக்கில், குறிப்பாக ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடுத்த போரின் நேரடி விளைவாக, சர்வதேச எரிசக்தி சந்தை பெரும் ஸ்திரமற்ற நிலையை அடைந்துள்ளது.
மே மாத சர்வதேச எரிசக்தி முகமையின் அறிக்கை எச்சரித்திருப்பது போல, எரிபொருள் விலை உயர்வு என்பது இந்த ஆண்டு முழுவதும் தீராத ஒரு சர்வதேசப் பிரச்சினையாகவே நீடிக்கப் போகிறது.
உள்நாட்டுப் பொருளாதாரப் பலவீனங்கள் காரணமாக, இலங்கைக்கு இதன் தாக்கம் அடுத்த ஆண்டிலும் தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.
ஆனால், இந்த உலகளாவிய நெருக்கடியை அரசாங்கம் கையாளும் விதத்திலும், அது குறித்து மக்களுக்குத் தெரிவிக்கும் புள்ளிவிபரங்களிலும் தான் பெரும் முரண்பாடுகள் காணப்படுகின்றன.
ஜனாதிபதியின் கூற்றுப்படி, பெப்ரவரியில் 98 மில்லியன் டொலராக இருந்த எரிபொருள் இறக்குமதிச் செலவு, மே மாதத்தில் 522 மில்லியன் டொலரை எட்டும் என்று மதிப்பிடப்பட்டு, செலவு '6 மடங்கு' அதிகரித்து விட்டதாக அரசாங்கம் அச்சமான நிலையை உருவாக்குகிறது.
ஆனால், மத்திய வங்கியின் கடந்த காலத் தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் மாதாந்த சராசரி எண்ணெய் இறக்குமதிச் செலவு 333 மில்லியன் டொலராக இருந்தது. உண்மையில், பெப்ரவரி மாத இறுதியில் நாட்டின் வெளிநாட்டு இருப்புக்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கமே திட்டமிட்டு எரிபொருள் கொள்வனவைக் குறைத்திருந்தது.
அதன் விளைவாகவே அப்போது செயற்கையான எரிபொருள் தட்டுப்பாடும் நீண்ட வரிசைகளும் உருவாயின. பெப்ரவரியின் குறைந்த கொள்வனவினால் ஏற்பட்ட பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவே, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கூடுதல் எரிபொருள் இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டது.
எனவே, பெப்ரவரியின் திட்டமிட்ட கொள்வனவுக் குறைப்பை அடித்தளமாக வைத்து, 6 மடங்கு செலவு உயர்ந்துவிட்டதாக ஜனாதிபதி கூறுவது, தனது நிர்வாகத் தொய்வுகளை மறைப்பதற்கான ஒரு தந்திரோபாய மாய பிம்பமே அன்றி வேறில்லை.
மறுபுறம், நாட்டின் வெளிநாட்டுச் செலாவணிக் கையிருப்பும், நாணய மதிப்பின் வீழ்ச்சியும் கவலையளிக்கும் வேகத்தில் நகர்கின்றன. பெப்ரவரியில் 7.2 பில்லியன் டொலராக இருந்த கையிருப்பு, ஏப்ரல் முடிவில் 6.759 பில்லியன் டொலராகக் குறைந்துள்ளது.
இதேவேளை, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 2026 ஏப்ரல் பாதியில் 330 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த வீழ்ச்சிக்கு சர்வதேசச் சந்தை காரணமாய் காட்டப்பட்டாலும், உள்நாட்டில் தாராளமயமாக்கப்பட்ட இறக்குமதிப் பொருளாதாரமும் இதற்கு முக்கிய காரணமாகும்.
முன்னைய அரசாங்கங்கள் வாகன இறக்குமதியைக் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தன. ஆனால், தற்போதைய அரசாங்கம் சுங்க வரி மூலம் குறுகிய கால வருமானத்தைப் பெருக்கும் நோக்கில், வாகன இறக்குமதிக்கான தடைகளைத் தளர்த்தியது.
2026 இன் முதல் மூன்று மாதங்களில் ஒட்டுமொத்த இறக்குமதிச் செலவு 5.77 பில்லியன் டொலராகப் பாரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. வாகன இறக்குமதித் தளர்வால் பெருமளவிலான டொலர்கள் நாட்டை விட்டு வெளியேறியதும், உள்நாட்டில் எரிபொருளுக்கான தேவை அதிகரித்ததும் தற்போதைய நாணய வீழ்ச்சிக்கு வழிகோலின.
இந்தத் தீவிரமடைந்து வரும் டொலர் நெருக்கடியைக் கட்டுப்படுத்துவதற்காக, அரசாங்கம் கடந்த மே 15 முதல் அமுலுக்கு வரும் வகையில், மோட்டார் வாகனங்களின் சுங்க இறக்குமதி வரியின் மீது தற்காலிகமாக 50 சதவீத மேலதிகக் கட்டணத்தை அவசரமாக விதித்துள்ளது.
முதலில் இறக்குமதியைத் திறந்துவிட்டுவிட்டு, பின்னர் டொலர் கரையும் போது அவசரமாக வரியை உயர்த்துவது முறையான நிதியியல் முகாமைத்துவமாகாது. அரசாங்கத்தின் இத்தகைய முரண்பட்ட புள்ளிவிபர அரசியல், மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பொருட்களின் மீதான விலையேற்ற அச்சத்தை மேலும் தூண்டியுள்ளது.
தற்போது ஒரு லீற்றர் டீசலின் உண்மையான சந்தை விலை 720 ரூபா என்றும், அதற்கு அரசாங்கம் 100 ரூபா மானியம் வழங்குவதாகவும் ஜனாதிபதி குறிப்பிடுவது, எதிர்காலத்தில் டீசல் விலையை மேலும் பாரியளவில் உயர்த்துவதற்கான அபாய சமிக்ஞையா என்ற நியாயமான சந்தேகத்தை மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் டீசல் விலை 31.6 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ள நிலையில், உள்நாட்டில் தற்போது 36 சதவீதம் விலை உயர்த்தப்பட்டு 392 ரூபாவுக்கு விற்கப்படுகிறது.
சர்வதேச விலை உயர்வைவிட உள்நாட்டு விலை உயர்வு அதிகமாக இருக்கும் போது, அரசாங்கம் கூறுவதாகச் சொல்லும் 100 ரூபா மானியம் எங்கே செல்கிறது என்ற பொருளியல் ரீதியான கேள்விக்கு அரசாங்கத்திடம் தெளிவான பதிலில்லை.
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைவதும், பண வீக்கம் மீண்டும் தலைதூக்குவதும் சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேரழிவிற்குள்ளாக்கும்.
சர்வதேசப் போர்ச் சூழல் இலங்கையின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணியாக இருந்தாலும், உள்நாட்டு நிதியியல் முகாமைத்துவத்தில் நிலவும் முரண்பாடுகளை அரசாங்கம் மூடிமறைக்க முடியாது. சர்வதேச நாணய நிதியத்தின் பாராட்டுகளைப் பெற்றுவிட்டதாகக் கூறிக்கொள்ளும் அதேவேளையில், உள்நாட்டில் மக்களுக்குப் புள்ளிவிபரங்கள் மூலம் அச்சமூட்டுவதை அரசாங்கம் தவிர்க்க வேண்டும்.
உண்மையான பொருளாதார ஸ்திரத்தன்மையை எட்ட வேண்டுமாயின், மாய பிம்பங்களை உருவாக்குவதை விடுத்து, வெளிப்படையான தரவுகளுடன், முறையான நீண்டகால இறக்குமதி-ஏற்றுமதிக் கொள்கைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவது அவசியமாகும்.
ஆனால் அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில் அவ்விதமான செயற்பாட்டுக்கு தயாராக இல்லை. அதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது ஆட்சி அதிகாரத்தின் மீதான அச்சமாகும்.
தேசிய மக்கள் சக்தியைப் பொறுத்தவரையில் ஆட்சி அதிகாரம் தொடர்பில் அனுபவமற்ற தன்மையும், அரச அதிகாரிகளின் முழுமையான ஒத்துழைப்பின்மையும் நிருவாகத்தை முன்னெடுப்பதில் நெருக்கடிகளை தோற்றுவித்த வண்ணமுள்ளன.
தற்போதைய நிலையில் எதிரணிகளின் பலவீனமான நிலைமை மட்டும் தான் ஆட்சியாளர்களுக்கு இருக்கின்ற சாதகமானதொரு நிலைமையாகும். அதுமட்டுமன்றி மக்கள் வீதிக்கு இறங்காத வரையில்தான் அனைத்துமே சுமுக நிலையில் செல்லும்.
பொருளாதார சுமைகளை தாங்க முடியாது மக்கள் வீதிக்கு இறங்க ஆரம்பித்தால் மீண்டும் நெருக்கடிகள் தாராளமாக தலைதூக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.





