தேசியமயமாக்கப்படும் மாநில அரசியல் களம்
பா.ஜ.க. இந்த எதிர்ப்புகளைத் தனது 'வளர்ச்சி அரசியல்' மூலம் முறியடிக்க முயல்கிறது.
தென்னிந்திய, கிழக்கிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள அதிகார மாற்றங்கள் இந்திய அரசியலின் புதிய திசையை அடையாளப்படுத்துகின்றன.
இந்த மாநிலங்களில் நிலவி வந்த பாரம்பரிய அரசியல் கட்டமைப்புகள் சிதைக்கப்பட்டு, புதிய சக்திகளின் எழுச்சியும், பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க.) ஊடுருவலும் ஒரு முக்கியமான வரலாற்றுத் திருப்பமாக அமைந்துள்ளது.
தமிழ் நாட்டைப் பொறுத்தவரை, 2026-ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் ஒரு மாபெரும் அரசியல் நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அரை நூற்றாண்டு; காலமாக தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு துருவங்களைச் சுற்றியே சுழன்று வந்த தமிழக அரசியல், இன்று புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது.
குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) வருகை மற்றும் அதன் தலைவர் விஜய்யின் வெற்றி, திராவிடக் கட்சிகளின் ஏகபோக ஆதிக்கத்திற்குப் பெரிய சவாலாக மாறியுள்ளது.
அதேவேளையில் பா.ஜ.க. தமிழகத்தில் தனது வாக்கு வங்கியைத் தந்திரமாக உயர்த்தி வருவதையும் கவனிக்க முடிகிறது. ஆன்மீக அரசியல் மற்றும் தேசபக்தி என்ற முழக்கங்களை முன்னிறுத்தி, திராவிட இயக்கத்தின் நாத்திக மற்றும் மாநில உரிமைப் பேச்சுகளுக்குப் போட்டியாக பா.ஜ.க. புதிய கதையாடலை உருவாக்கியுள்ளது.
இது தமிழ் நாட்டின் பாரம்பரிய அரசியல் தளத்தில் ஒரு பிளவை ஏற்படுத்தியுள்ளதுடன், திராவிடக் கட்சிகளின் வீழ்ச்சிக்கான ஆரம்பப்புள்ளியாகவும் பார்க்கப்படுகிறது.
கேரளாவில் நிலவி வரும் இடதுசாரி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான முன்னணிகளின் மாறி மாறி ஆட்சி செய்யும் கலாசாரம், இம்முறை பா.ஜ.க.வின் எழுச்சியால் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
'கடவுளின் தேசம்' என்று அழைக்கப்படும் கேரளாவில், சபரிமலை விவகாரம் தொடங்கி அண்மைய மதமாற்றப் புகார்கள் வரை பா.ஜ.க. தனது இந்துத்துவக் கொள்கைகளை மிகத் தீவிரமாக விதைத்துள்ளது.
கேரளாவின் படித்த நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஊழலற்ற நிர்வாகம் மற்றும் தேசிய வளர்ச்சி என்ற பா.ஜ.க.வின் பிரசாரம் எடுபடத் தொடங்கியுள்ளது.
இது கேரளாவின் இருதுருவ அரசியலில் மூன்றாவது சக்தியாக பா.ஜ.க.வை நிலைநிறுத்தியுள்ளது. இடதுசாரிகளின் வாக்கு வங்கியில் பா.ஜ.க. ஏற்படுத்தியுள்ள இடைவெளியானது, வரும் காலங்களில் கேரள அரசியலில் பெரும் அதிகார மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதை இத்தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.
புதுச்சேரியைப் பொறுத்தவரை, அது எப்போதும் தேசிய அரசியலின் போக்கைத் தீர்மானிக்கும் சிறிய ஆனால் முக்கியமான களமாகவே இருந்து வருகிறது. புதுச்சேரியில் பா.ஜ.க. தனது கூட்டணியின் மூலம் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருப்பதுடன், அங்குள்ள பிராந்தியக் கட்சிகளின் செல்வாக்கைச் சிறுகச் சிறுகக் குறைத்து வருகிறது.
புதுச்சேரியைத் தமிழக அரசியலின் நீட்சியாகப் பார்க்காமல், அதனைத் தனது நேரடி ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர பா.ஜ.க. எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளன. மாநில அந்தஸ்து தொடர்பான கோரிக்கைகளை விடவும், மத்திய அரசின் நேரடித் திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகளை முன்னிறுத்தி பா.ஜ.க. அங்கு தனது பிடியை வலுப்படுத்தியுள்ளது.
கிழக்கிந்திய மாநிலமான மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸிற்கும் பா.ஜ.க.வுக்கும் இடையிலான போர், இந்தியாவிலேயே மிகவும் ஆக்ரோஷமான ஒன்றாக மாறியுள்ளது.
ஒரு காலத்தில் இடதுசாரிகளின் கோட்டையாக இருந்த மேற்குவங்கம், இன்று பா.ஜ.க.வின் பிரதான இலக்காக மாறியுள்ளது. ஊடுருவல் மற்றும் தேசப்பாதுகாப்பு ஆகியவற்றை முன்னிறுத்தி பா.ஜ.க. அங்கு மேற்கொண்ட பிரசாரம், இந்து வாக்குகளை ஒருங்கிணைப்பதில் வெற்றி கண்டுள்ளது.
மம்தாவின் 'மா, மாட்டி, மானுஷ்' என்ற முழக்கத்திற்கு எதிராக 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற முழக்கத்தை ஒரு அரசியல் ஆயுதமாக பா.ஜ.க. மாற்றியுள்ளது. மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ள இந்த அதிகார மாற்றம், வன்முறை மற்றும் அரசியல் துருவமுனைப்பின் உச்சமாகத் தெரிந்தாலும், பா.ஜ.க. அங்கு மாற்று சக்தியாக வளர்ந்திருப்பதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
அசாம் மாநிலத்தில் பா.ஜ.க. ஏற்கனவே தனது ஆட்சியை நிலைநிறுத்தியிருந்தாலும், 2026இல் ஏற்பட்டுள்ள மாற்றம் என்பது அதன் கொள்கை ரீதியான வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற விவகாரங்கள் அசாமில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தாலும், பா.ஜ.க. தனது 'அசாமிய அடையாளம்' மற்றும் 'பாதுகாப்பு' என்ற பிரசாரத்தின் மூலம் மீண்டும் வெற்றியைத் தன்வசப்படுத்தியுள்ளது.
அசாமின் பழங்குடி மக்கள் மற்றும் பூர்வகுடி மக்களின் வாக்குகளைப் பெறுவதில் பா.ஜ.க. காட்டிய வியூகம், அங்குள்ள காங்கிரஸ் மற்றும் இதர பிராந்தியக் கட்சிகளைப் பலவீனப்படுத்தியுள்ளது. வட,கிழக்கு மாநிலங்களுக்கான நுழைவுவாயிலாக அசாம் திகழ்வதால், அங்கு பா.ஜ.க.வின் வலுவான எழுச்சி ஒட்டுமொத்த வட,கிழக்கு அரசியலையும் அதன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.
இந்த ஐந்து மாநிலங்களிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, பா.ஜ.க.வின் எழுச்சி என்பது வெறும் தேர்தல் வெற்றி மட்டுமல்ல, அதுவொரு கருத்தியல் மாற்றமாகும்.
தென்னிந்தியாவில் பா.ஜ.க.வை நுழைய விடமாட்டோம் என்ற முழக்கங்கள் வலுவாக இருந்தபோதிலும், தற்போது தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியில் பா.ஜ.க. ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது.
பிராந்தியக் கட்சிகளின் பலவீனங்களையும், அவற்றுக்கு இடையிலான உட்கட்சி மோதல்களையும் பா.ஜ.க மிகச்சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறது. குறிப்பாக, மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சித் தத்துவம் போன்ற கோரிக்கைகளை விடவும், 'ஒற்றை இந்தியா' மற்றும் 'வலுவான தலைமை' என்ற பிம்பத்தை இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்வதில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது.
இருப்பினும், இந்த அதிகார மாற்றமானது சில கவலைகளையும் எழுப்பியுள்ளது. மாநிலங்களின் தனித்துவமான கலாசார, மொழி அடையாளங்கள் தேசிய நீரோட்டத்தில் கரைந்துவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
குறிப்பாகத் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் மொழிப்பற்று என்பது அரசியலின் உயிர்நாடியாக உள்ளது. பா.ஜ.க.வின் 'இந்தி-இந்து-இந்தியா' என்ற அணுகுமுறை இந்த மாநிலங்களில் ஒருவிதமான எதிர்ப்பு உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், பா.ஜ.க. இந்த எதிர்ப்புகளைத் தனது 'வளர்ச்சி அரசியல்' மூலம் முறியடிக்க முயல்கிறது. மத்திய அரசின் நேரடிப் பலன்கள் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வதன் மூலம், மாநிலக் கட்சிகளின் இடைத்தரகர் பாத்திரத்தை பா.ஜ.க. நீக்க முயல்கிறது.
அதிகார மாற்றம் என்பது வெறும் நாற்காலிகளை மாற்றுவது மட்டுமல்ல, அது மக்களின் சிந்தனை மாற்றத்தையும் குறிக்கிறது. இந்த ஐந்து மாநிலங்களிலும் மக்கள் மாற்றத்தை விரும்பியுள்ளனர் என்பது தெளிவாகிறது. அந்த மாற்றத்தை பா.ஜ.க. தனது எழுச்சியின் மூலம் பயன்படுத்திக் கொள்கிறதா அல்லது பிராந்தியக் கட்சிகள் தங்களைச் சீரமைத்துக்கொண்டு மீண்டெழுமா என்பதை வரும் காலமே தீர்மானிக்கும்.





