அரசசேவையானது அரசியல் அதிகாரிகளின் கைப்பாவையாக மாறக்கூடாது - எதிர்கட்சி தலைவர் சஜித்
2027 மார்ச் மாதத்துடன் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் நிறைவடைகிறது.
அரசியல் தலையீடுகள் இல்லாத, வினைத்திறன் மிக்க மற்றும் நேர்மையான அரச சேவையொன்றைக் கட்டியெழுப்புவதே எனது நோக்கம். அரசாங்க சேவையானது அரசியல் அதிகாரிகளின் கைப்பாவையாக மாறக்கூடாது என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
குளியாபிட்டிய நகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான சபை உறுப்பினர்கள் ஊழியர்கள் மற்றும் அரச அதிகாரிகளை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், அரச சேவையாளர்கள் என்பவர்கள் காலத்துக்குக் காலம் ஆட்சிக்கு வரும் அரசியல் அதிகாரிகளின் கைப்பாவைகள் அல்ல. தகுதி, திறமை மற்றும் ஆற்றல் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு சுயாதீனமான அரச சேவையாக இருக்க வேண்டும். சவால்கள் நிறைந்த இந்தத் தருணத்தில், மக்களின் துயரங்களுக்கு நிம்மதியை வழங்க வேண்டிய பாரிய பொறுப்பு அரச சேவையாளர்களுக்கு உள்ளது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து குடிமக்கள் சரியான புரிதலைக் கொண்டிருப்பது அவசியம். சர்வதேச பொருளாதார விதிகளின்படி, ஒரு நாட்டின் வெளிநாட்டு கையிருப்பில் எப்போதும் குறைந்தது 3 மாதங்களுக்கான இறக்குமதி பெறுமதியை ஈடுசெய்யக்கூடியளவு கையிருப்பு இருக்க வேண்டும். எமது நாட்டின் கையிருப்பில் தற்போது 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், அதில் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சீன யுவான் நாணயமாக இருப்பதால் அதை உடனடியாகப் பயன்படுத்த முடியாது. ஒவ்வொரு மாதமும் இறக்குமதிக்காக 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படுவதால், கையிருப்பு குறித்த மாயைகளில் சிக்காமல் உண்மையான நிதி நிலைமையை உணர்ந்து செயற்பட வேண்டும்.
2027 மார்ச் மாதத்துடன் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் நிறைவடைகிறது. 2028 ஆம் ஆண்டிலிருந்து இறக்குமதிக்காகச் செலவிடும் தொகையைத் தாண்டி, வருடாந்தம் 3 முதல் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகச் செலுத்த வேண்டிய பாரிய நெருக்கடி ஏற்படும். மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழலால், அங்கிருந்து எமது நாட்டுக்கு வரும் 8 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பணப் பரிமாற்றங்கள் வீழ்ச்சியடைந்தால், பொருளாதாரம் மேலும் பலவீனமடையும். எனவே, ஏற்றுமதித்துறையை மேம்படுத்தி, நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க வேண்டும். 220 இலட்சம் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், 100 இல் தொடங்கி 140 வரை உயர்ந்துள்ள வறுமையைக் கட்டுப்படுத்தவும் புதியதொரு வேலைத்திட்டத்துடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
உள்ளூராட்சி மன்றங்கள் பொதுமக்களுக்கு மிக நெருக்கமான பொதுச் சேவை நிறுவனங்களாகும். 1971, 1988-89 காலப்பகுதிகள் மற்றும் 30 வருட யுத்தத்தினால் நாட்டின் மனித மற்றும் பௌதீக வளங்கள் அழிந்தன. 1991 இல் ஆரம்பிக்கப்பட்ட பிராந்திய சபை முறை காலப்போக்கில் சிதைவடைந்தாலும், அதை மீளக் கட்டியெழுப்புவதில் அரச அதிகாரிகள் காட்டும் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. 9 மாகாணங்கள், 25 மாவட்டங்கள், 346 பிரதேச மற்றும் உப பிரதேச செயலகங்கள், 341 உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் 51,000 கிராமங்கள் ஊடாகச் செயற்படும் அரச அதிகாரிகளே இந்த நாட்டின் உண்மையான நிர்வாக இயந்திரம்.
அரசியல் தலையீடுகள் இல்லாத, வினைத்திறன் மிக்க மற்றும் நேர்மையான அரச சேவையொன்றைக் கட்டியெழுப்புவதே எனது நோக்கம். உள்ளூராட்சி மன்றங்கள் மூலம் வழங்கப்படும் சேவைகளை மேலும் தரப்படுத்துவதற்காக, தற்போதைய நிதி ஒதுக்கீட்டுடன் மேலதிகமாக 15 முதல் 20 சதவீத ஆதரவை வழங்கி, நகர பிதா மற்றும் அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடனும் இணைந்து பணியாற்ற தான் தயாராக இருக்கிறேன். அரச சேவையாளர்களின் இந்த உன்னதமான சேவையை மதிப்பதே உண்மையான நன்றிக்கடன் என்றார்.





