கம்பனிகளிடமிருந்து 10 பேர்ச் காணியைப் பெற்று 50 இலட்சம் செலவில் பெருந்தோட்ட மக்களுக்கு வீடமைப்பு திட்டம்
தித்வா புயலால் பாதிக்கப்பட்ட மலையக தமிழ் மக்கள், வெளியில் காணியைப் பெற்று அல்லது அரச காணியில் குறித்த 5 மில்லியனில் தமக்கான வீட்டைப் பெற்றுக் கொள்வதற்கான மாற்று தீர்வும் உண்டு.
தித்வா புயல் அனர்த்தத்தால் முழுமையாக அல்லது பகுதியளவில் வீடுகள் சேதமடைந்த மற்றும் மண்சரிவு ஆபத்துக்கள் காணப்படுகின்ற இடங்களில் வசிக்கின்ற தோட்டத்தொழிலாளர் குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய பெருந்தோட்ட கம்பனிகளிடமிருந்து தோட்டப்பகுதியில் 10 பேர்ச் காணியைப் பெற்று அதில் 50 இலட்சம் செலவில் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளதாக பதில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும் அவ்வாறு தோட்டக் காணியில் வீடுகளைப் பெற்றுக் கொள்பவர்கள் தொடர்ந்தும் அங்கேயே தொழில் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை கம்பனிகள் சார்பில் காணப்படுவதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டினார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 07-04-2026 அன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தித்வா புயல் அனர்த்தத்துக்கு பின்னர் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை ஆலோசனைகளுக்கமைய, வீடுகள் சேதமடைந்த குடும்பங்களுக்கான வீடமைத்தல் மற்றும் புனரமைப்பதற்குத் தேவையான ஏற்பாடுகள் வகுக்கப்பட்டிருப்பினும், அச்சுற்றறிக்கை ஆலோசனைகளுக்கமைய தோட்டத்தொழிலாள வதிவிடதாரர்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு விசேட ஏற்பாடுகள் இச்சுற்றறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
அதனால், தோட்டக் கம்பனிகளால் நிர்வகிக்கப்படுகின்ற தோட்டங்களில் தொழில் புரிகின்ற தொழிலாளர்களின் வீடுகள், தித்வா புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் வேறு இயற்கை அனர்த்தங்களால் முழுமையான பாதிப்புக்களுக்கு உள்ளாகியமை, மண்சரிவால் அதி ஆபத்துக்குள்ளாகியமை, பகுதியளவில் பாதிப்படைந்து அவற்றின் பயன்பாட்டுக்காலம் முடிவடைந்தமை உறுதிப்படுத்தப்படுகின்ற சந்தர்ப்பங்களில், பாதுகாப்பு அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்கள் மற்றும் வீட்டுத் திட்டவரைபடத்திற்கமைய 650 சதுரஅடி வீடொன்றை அமைப்பதற்காக கட்டம் கட்டமாக 5 மில்லியன் ரூபாவை அரசு வழங்கும்.
அவ்வாறு நிதியை வழங்கி தொழிலாளர்களுக்கு வீடமைப்புத் திட்டத்தை அமல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த தொழிலாளிக்கு அவர்கள் வசித்து வருகின்ற தோட்டத்திலேயே பாதுகாப்பான இடத்தில் 10 பேர்ச்சர்ஸ் காணித்துண்டை அந்தந்த தோட்டக் கம்பனிகளால் வழங்குவதற்கும், தோட்டத் தொழிலாளரின் சேவை தொடர்ந்தும் தேவையில்லையென தோட்டக் கம்பனி தீர்மானிக்கின்ற போது, தொழிலாளரிடமுள்ள காணியில் அல்லது வழங்கப்படுகின்ற 5 மில்லியன் ரூபாவில் காணியொன்றைக் கொள்வனவு செய்து வீட்டை அமைப்பதற்கும் உத்தேச வேலைத்திட்டத்தின் மூலம் வசதியளிக்கப்படும்.
அதற்கமைய, குறித்த வேலைத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு தேவையான படிமுறைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன இணைந்து சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மாறாக தொடர்ந்தும் பெருந்தோட்டத் தொழிலில் ஈடுபட விரும்பாத ஆனால் தித்வா புயலால் பாதிக்கப்பட்ட மலையக தமிழ் மக்கள், வெளியில் காணியைப் பெற்று அல்லது அரச காணியில் குறித்த 5 மில்லியனில் தமக்கான வீட்டைப் பெற்றுக் கொள்வதற்கான மாற்று தீர்வும் உண்டு.
இது முழுமையாக அரசாங்கத்தின் தலையீட்டுடனேயே முன்னெடுக்கப்படும். காணியுடன் வீட்டைப் பெற்றுக் கொண்ட பின்னர் தொழிலாளர்கள் வெளியிடங்களுக்கு சென்றால் தமக்கு ஆளனி பற்றாக்குறை ஏற்படும் என்பதால், அவர்கள் தொடர்ந்தும் தோட்டத் தொழிலில் ஈடுபட வேண்டும் என்ற நிபந்தனையை கம்பனிகள் முன்வைத்துள்ளன. கம்பனிகள் காணியை வழங்கும் பட்சத்தில் நிரந்த உரித்துடன் பயனாளர்களுக்கு அந்த வீடு கையளிக்கப்படும். தித்வா புயலின் பின்னர் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் வாழ்வதற்கு பாதுகாப்பற்ற இடம் என வழங்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் உள்ளடங்கும் பெருந்தோட்ட மக்கள் மாத்திரமே இதில் உள்வாங்கப்படுவர் என்றார்.





