நாட்டின் ஜனாதிபதி யார் என்பதில் சந்தேகம் - சாணக்கியன்
நாட்டின் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவா அல்லது ரில்வின் சில்வாவா என்ற சந்தேகம் எமக்கு காணப்படுகிறது.
நாட்டின் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவா அல்லது ரில்வின் சில்வாவா என்ற சந்தேகம் எமக்கு காணப்படுகிறது. மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டு நடத்த முடியாது என்று குறிப்பிடுவதற்கு மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளருக்கு என்ன அதிகாரம் உள்ளது.ரில்வின் சில்வாவின் கருத்துக்கள் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவை அவமதிப்பதாக அமைந்துள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டு நடத்த முடியாது, ஒதுக்கிய நிதி தித்வா தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணமளிக்க செலவிடப்பட்டுள்ளது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளமை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, மாகாணசபைத் தேர்தலை எந்த தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவது என்பது தொடர்பில் பாராளுமன்ற செயற்குழுவின் ஊடாக தொடர் கலந்துரையாடல்களில் நாங்கள் ஈடுபட்டுள்ள நிலையில் மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டு நடத்த முடியாது என்று ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட செயற்குழு கடந்தவாரம் கூடிய போது பலவிடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகள், தீர்மானங்கள் மற்றும் எல்லைநிர்ணய சிக்கல்கள் தொடர்பில் ஆராய்ந்து சட்டமா அதிபர் திணைக்களம் 03 அவதானிப்புக்களை முன்வைத்துள்ளது.
இந்த விசேட செயற்குழு மூன்று மாதகாலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று பணிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான நகர்வுகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.இவ்வாறான பின்னணியில் ரில்வின் சில்வா இந்த ஆண்டு தேர்தல் இல்லை. 2026 ஆம் ஆண்டு வரவு- செலவுத் திட்டத்தில் ஒதுக்கிய நிதி செலவாகிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவா அல்லது ரில்வின் சில்வாவா என்ற சந்தேகம் எமக்கு காணப்படுகிறது. மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டு நடத்த முடியாது என்று குறிப்பிடுவதற்கு மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளருக்கு என்ன அதிகாரம் உள்ளது.ரில்வின் சில்வாவின் கருத்துக்கள் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவை அவமதிப்பதாக அமைந்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்தில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாக குறிப்பிட்டது. ஆனால் அதற்கான எவ்வித சாத்தியமான நடவடிக்கைகளையும் இதுவரையில் முன்னெடுக்கவில்லை. ஆகவே வழங்கிய வாக்குறுதிக்கு அமைய அரசாங்கம் செயற்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றார்.





