நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்வு
இந்த மோதலில் கைதிகள் தரப்பில் 20 பேர் உயிரிழந்திருந்ததோடு, இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் படுகாயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த மற்றுமொரு சிறைச்சாலை அதிகாரி ஒருவர் 08-07-2026 அன்று உயிரிழந்துள்ளதை அடுத்து, இந்த மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்தோடு, மோதலைத் தொடர்ந்து நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்த கைதி ஒருவர் திடிர் உடல்நலக் குறைவு காரணமாக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
கடந்த 6 ஆம் திகதி காலை நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் இரண்டாவது நாளாகவும் தொடர்ந்த மோதலின் போது, கைதிகளின் கடுமையான தாக்குதல்களுக்கு இலக்காகி சிறைச்சாலை அதிகாரிகள் 7 பேர் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறைசாலை அதிகாரி ஒருவரும் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்த சிறை அதிகாரிகளின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இந்த மோதலில் கைதிகள் தரப்பில் 20 பேர் உயிரிழந்திருந்ததோடு, இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் 100 இற்கும் மேற்பட்டோரோ காயமடைந்த நிலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். மோதலைத் தொடர்ந்து பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்த கைதியொருவரும் உடல் நலக்குறைவு காணமாக காலி கராபிட்டிய தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப்பேச்சாளருமான எ.சி.கஜனாயக்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு நேற்றைய தினம் காலை நாடளாவிய ரீதியில் உள்ள சிறைசாலை சிரேஷ்ட அதிகாரிகள் அணைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு விசேட கலந்துறையாடல் ஒன்றும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.





