விசாரணைகள் தீவிரமடையும் போது கம்மன்பில பதற்றம் - அமைச்சர் விஜித ஹேரத்
நீதிமன்றத்தின் மூலம் இது தொடர்பான இறுதித் தீர்மானம் எட்டப்படும் வரை, இவ்வாறான புத்தக வெளியீடுகள் மற்றும் கருத்துக்கள் விசாரணைகளை திசைதிருப்பும் முயற்சியாகவே அமையும்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான விசாரணைகளை அரசாங்கம் முறைப்படி பலப்படுத்தி முன்னெடுத்து வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில போன்றவர்கள் தேவையற்ற முறையில் பதற்றமடைகின்றனர். இது மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக பதில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 07-04-2026 அன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து உண்மையான விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் போதெல்லாம் உதய கம்மன்பில போன்றவர்கள் கடும் கலக்கமடைவதைக் காணமுடிகிறது. அண்மையில் அவர் வெளியிட்ட புத்தகத்தில் குறிப்பிடப்படும் சூத்திரதாரி என்று சொல்லப்படுபவர், அந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் எங்கே அமர்ந்திருந்தார் என்பதை இந்த நாடே நன்கு பார்த்தது. வெறும் புத்தகங்களை வெளியிடுவதன் மூலம் உண்மையான குற்றவாளிகளை மறைத்துவிட முடியாது.
நீதிமன்றத்தின் மூலம் இது தொடர்பான இறுதித் தீர்மானம் எட்டப்படும் வரை, இவ்வாறான புத்தக வெளியீடுகள் மற்றும் கருத்துக்கள் விசாரணைகளை திசைதிருப்பும் முயற்சியாகவே அமையும். குறிப்பாக, சுரேஷ் சலே போன்றவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழும் போதெல்லாம் இவர்களே முன்னின்று பதற்றமடைகிறார்கள்.
இவர்களின் இத்தகைய செயல்பாடுகள்தான் பொதுமக்கள் மத்தியில் பெரும் சந்தேகங்களை வலுக்கச் செய்கின்றன. தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள உண்மையான சக்திகளைக் கண்டறியும் வரை அரசாங்கம் தனது விசாரணைகளைக் கைவிடாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது ஆட்சியில் நிச்சயம் நியாயம் வழங்கப்படும் என்றார்.





