அரசாங்கம் டொலரின் மதிப்பை வெற்றிகரமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது - அமைச்சர் வசந்த சமரசிங்க
பொருளாதார நெருக்கடிக்கு காரணம் நாணயத்தாள்களை அச்சிட்டமையே என்று எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவையாகும்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள யுத்த சூழ்நிலை மற்றும் உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இலங்கையின் பொருளாதாரத்தை பாதுகாத்து மக்களின் அன்றாட வாழ்க்கையைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்களை மேற்கொண்டுள்ளதுடன் உள்நாட்டுச் சந்தையில் டொலரின் மதிப்பை அரசாங்கம் வெற்றிகரமாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது என்று வர்த்தக வாணிப உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிசக்தி நெருக்கடிகள் காரணமாக இறக்குமதி செலவுகள் அதிகரித்துள்ளது. அதேபோல் பல்வேறு துறைகளிலும் நெருக்கடிகள் ஏற்பட்ட போதிலும் உள்நாட்டுச் சந்தையில் டொலரின் மதிப்பை அரசாங்கம் வெற்றிகரமாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அதற்காக அரசாங்கம் மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருட்களின் விலையில் மாற்றம், கியூ.ஆர் குறியீடு அறிமுகம் போன்ற பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்களை மேற்கொண்டுள்ளது. அதேபோல் வாகன இறக்குமதிக்கான வரிகளை 15 சதவீதம் வரை அதிகரித்ததன் மூலமும் தேவையற்ற சொகுசு வாகன இறக்குமதிகளைக் கட்டுபடுத்தியதன் மூலமே இந்த சாதகமான நிலைமை எட்டப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னால் 350 முதல் 355 ரூபா வரை அதிகரித்த டொலரின் பெறுமதி தற்போது 330 முதல் 345 ரூபா வரையான மட்டத்துக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இதேவேளை, டொலர் வீக்கத்தை ஒரு காரணமாக வைத்து நுகர்வோரை சுரண்டும் நோக்கில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைத் தன்னிச்சையாக அதிகரிக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையினூடாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக கீரி சம்பா அரிசிக்கு 255 ரூபாவும் சம்பா அரிசிக்கு 240 ரூபாவும் கட்டுப்பாட்டு விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு அதிகமாக விற்கும் வர்த்தகர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கமு. நாட்டில் போதுமான அளவு நாடு மற்றும் வெள்ளை அரிசி 3 மாதங்களுக்கு வரை கையிருப்பில் உள்ள நிலையில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் வங்கி கடன் நெருக்கடிகள் குறித்து நிதியமைச்சுடன் கலந்துரையாடி தீர்வு காண்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு காரணம் நாணயத்தாள்களை அச்சிட்டமையே என்று எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவையாகும். நாட்டின் டொலர் கையிருப்பிருப்பை பாதுகாப்பதற்கு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் தமது பணத்தை நாட்டுக்கு அனுப்ப வேண்டும். அத்துடன் ஏற்றுமதியாளர்கள் தமது உற்பத்திகளை விரைவாக ரூபாவாக மாற்ற வேண்டும். தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையின் பொருளதாரம் ஏனைய பிராந்திய நாடுகளை விடவும் முகாமைத்துவம் செய்யப்பட்டுள்ளதுடன், இருப்பினும் பொதுமக்கள் தேவையற்ற நுகர்வுகளை தவிர்த்து இந்த உலகளாவிய நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் முயற்சிக்கு ஆதரவை வழங்க வேண்டும்.





