அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லை - அமைச்சர் நளிந்த
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு நியாயமற்றது. புதிய நியமனம் பெற்ற வைத்தியர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பும், மக்கள் பாதுகாப்பும் வழங்கப்படும்.
அரசியல் நோக்கத்தை முன்னிலைப்படுத்தி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் நியாயமற்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகிறார்கள். இவர்களுடன் இனி எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லை. அரசாங்கம் என்ற அடிப்படையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். வரையறுக்கப்பட்ட பயிற்சிப் பெற்ற வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட முதல் நியமனத்தில் ஏதேனும் குறைகள் காணப்பட்டால் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நீதிமன்றம் செல்லலாமென சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 09-04-2026 அன்று நடைபெற்ற அமர்வின் போது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்பில் தெளிவுப்படுத்துகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இந்த மாதம் மாத்திரம் 5 தடவைகள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். மத்திய கிழக்கு நாடுகளில் மோதல் நிலைமை தீவிரமடைந்துள்ளதால் மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு, நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள்.இவ்வாறான பின்னணியில் இவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது நியாயமற்றது.
வரையறுக்கப்பட்ட பயிற்சி வைத்தியர்களுக்கு நியமனம் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் அரச மருத்துவ அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகிறார்கள்.நியமனம் வழங்கல் மற்றும் பின்தங்கிய பிரதேசங்களில் சேவை நியமன வழங்கல் தரப்படுத்தலின்போது தாம் பங்களிப்புச் செய்ய வேண்டும் என்று மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிடுகின்றனர்.
1 வருடகால வரையறுக்கப்பட்ட பயிற்சிப் பெற்ற வைத்தியர்களுக்கு முதல் நியமனத்தை வழங்க தீர்மானித்ததை தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பயிற்சிப் பெற்ற வைத்தியர்களை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைமை அலுவலகத்துக்கு கடந்த மாதம் 31 ஆம் திகதி அழைத்து அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள். நியமனத்தைப் பெற்றுக் கொண்டு செல்வதையும் பார்த்துக் கொள்கிறோம் என்று எச்சரித்துள்ளார்கள்.
பயிற்சிப் பெற்ற வைத்தியர்கள் குழுவில் 453 பேர் உள்ளார்கள் இவர்களில் 436 பேர் நியமனத்துக்கு விண்ணப்பித்துள்ளார்கள்.மிகுதியானவர்கள் அரச நியமனத்தை எதிர்பார்க்கவில்லை. ஆகவே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது பயனற்றது. நியமனம் தொடர்பான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே வரையறுக்கப்பட்ட பயிற்சி வைத்தியர்கள் இவ்வாரம் முதல் தமது புதிய சேவை பிரதேசங்களில் இருந்து சேவையாற்ற முடியும்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் அரசியல் நோக்கத்தை முன்னிலைப்படுத்தியே தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகிறார்கள்.நியமனத்தை ஏற்பதற்கு வைத்தியர்கள் தயாராகவுள்ள நிலையில் இவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகிறார்கள்.இது நியாயமற்றது. தாபன விதிக்கோவைக்கு முரணாகவே இவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகிறார்கள்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு நியாயமற்றது. புதிய நியமனம் பெற்ற வைத்தியர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பும், மக்கள் பாதுகாப்பும் வழங்கப்படும். மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட தீர்மானித்திருந்தேன். ஆனால் பேச்சுவார்த்தையில் ஈடுபட போவதில்லை .பணிப்புறக்கணிப்பு நியாயமற்றது. அரசாங்கம் என்ற அடிப்படையில் இதற்கு முகங்கொடுக்க தயாராகவுள்ளோம்.
வரையறுக்கப்பட்ட பயிற்சிப் பெற்ற வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட முதல் நியமனத்தில் ஏதேனும் குறைகள் காணப்பட்டால் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நீதிமன்றம் செல்லலாம். இரு தரப்பின் விடயங்களையும் ஆராய்ந்து நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கும். நியாயமற்ற பணிப்புறக்கணிப்பால் மக்களை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.





