உணவு நெருக்கடி ஏற்படாமல் இருப்பதற்கு விவசாயிகளின் அர்ப்பணிப்பே காரணம் - ஜனாதிபதி அநுரகுமார
விவசாய துறையில் நாம் உழைப்பு ரீதியான பெரும் சிக்கலை எதிர்கொண்டு வருகிறோம். எனவே, விவசாயத்துடன் நவீன தொழில்நுட்பத்தை இணைக்க வேண்டியுள்ளது.
உலகில் எத்தகைய பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டாலும், இலங்கையில் உணவு நெருக்கடி ஏற்படாமல் இருப்பதற்கு நமது விவசாயிகளின் இரவு பகல் பாராத அர்ப்பணிப்பே காரணமாகும். விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்த அரசாங்கத்திடம் 07 பிரதான துறைகளை உள்ளடக்கிய பாரிய திட்டங்கள் இருப்பதாக என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
அனுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதியில் 09-04-2026 அன்று நடைபெற்ற 59 ஆவது தேசிய புத்தரிசி விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, நமது முன்னோர்கள் உருவாக்கிய 32,000 குளங்களில் இன்று 14,000 மட்டுமே எஞ்சியுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான குளக்கட்டமைப்புகளைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும். குறிப்பாக, முதல் பதவிக்காலத்திற்குள் 'வடமத்திய பாரிய கால்வாய்' திட்டத்தை நிறைவு செய்து, மகாகந்தராவ குளத்திற்கு நீரைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். நிறுத்தப்பட்டிருந்த மல்வத்து ஓயா திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.
மேலும், உலக சந்தையில் உரத்தின் விலை அதிகரித்த போதிலும், விவசாயிகளின் சுமையைக் குறைக்க சிறுபோகத்தில் ஒரு மூட்டை யூரியாவை அதிகபட்சமாக 10,200 ரூபா என்ற விலையில் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நெல் விவசாயிகளுக்கான உர மானியம் 25,000-30,000 ரூபாவாகவும், மரக்கறி விவசாயிகளுக்கான மானியம் 18,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
விவசாயத்தில் உற்பத்தித்திறனை அதிகரிக்க நவீன தொழில்நுட்பம் மற்றும் கருவிகளை அறிமுகப்படுத்துவது அவசியம். அறுவடைக்கு பிந்தைய நஷ்டத்தைத் தவிர்க்க களஞ்சியப்படுத்தல் மற்றும் பொதியிடல் முறைகள் வலுப்படுத்தப்படும். நீண்டகாலமாக நிலவும் காணி உரிமைப் பிரச்சினையைத் தீர்க்க 'உரித்து' வேலைத்திட்டம் ஊடாக நிரந்தர அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
விவசாயிகளின் விளைச்சலுக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொடுப்பதோடு, கிராமப்புற வறுமையை ஒழித்து, விவசாயிகளுக்கு ஒரு கௌரவமான சமூக வாழ்க்கையை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்காகும்
விவசாயத்திற்கு நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு வர வேண்டும். புதிய இளம் தலைமுறையினர் புதிய கருவிகளை உற்பத்தி செய்து வருகின்றனர். நாம் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். விவசாய துறையில் நாம் உழைப்பு ரீதியான பெரும் சிக்கலை எதிர்கொண்டு வருகிறோம். எனவே, விவசாயத்துடன் நவீன தொழில்நுட்பத்தை இணைக்க வேண்டியுள்ளது.
உலகம் முழுவதும் நிலத்தை தயார் செய்தல், விதைத்தல், உரமிடுதல், அறுவடை செய்தல் என அனைத்தும் குறிப்பிடத்தக்க அளவில் நவீன தொழில்நுட்பத்திற்கு மாறியுள்ளன. எனவே, மிக வேகமாக எமது விவசாயத்திற்கு நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் எம்மால் உற்பத்தித்திறனை அதிகரிக்க முடியும் என்றார்.





