எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள்
தற்போது விவசாயம் செய்வதற்கு ஏற்படும் செலவைக் கணக்கிடுதல் முறையாக நடப்பதில்லை.
தேர்தல் காலங்களில் விவசாயியை அரசனாக்குவோம் எனக் கூறி வாக்குகளைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு , தற்போது விவசாயிகள் கசிப்புக்காரர்களாகி இருக்கிறார்கள். மனித உரிமையான விவசாயம், அடிப்படை உரிமையாக அமைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று விவசாய மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலின்போது அங்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், தற்போது விவசாய மக்கள் தேர்தல் காலங்களில் வாக்கு பெறுவதற்காக மட்டுமே முக்கியமானவர்களாகக் கருதப்படுகிறார்கள். தேர்தல் இல்லாத காலங்களில் விவசாய மக்களும் விவசாயமும் ஒரு தோல்வியடைந்த விடயமாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு பெற்றுக் கொடுக்கும் பங்களிப்பு போதுமானதாக இல்லை என்றும் பார்க்கப்படுகின்றனர். விவசாயியை அரசனாக்குவோம் எனக் கூறி வாக்குகளைப் பெற்று, இறுதியில் விவசாயி கசிப்புக்காரனாக மாற்றப்பட்டுள்ளார்
விவசாயிகள் முன்வைத்த ஆறு அம்ச முன்மொழிவுகளில் குளமும் தாதுகோபுரமும் கிராமமும் மத வழிபாட்டுத் தளமும் என்பதும் உள்ளடங்கியுள்ளது. இந்த கருத்தில் ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் இருக்கின்றது. விவசாயத்தை வலுப்படுத்துவது போல, நவீன தொழில்நுட்பத்தையும் விவசாயத்துடன் இணைக்க வேண்டும். நெல் விவசாயிகளை மாத்திரமன்றி ஏனைய அனைத்துப் பயிர்ச் செய்கைகளிலும் ஈடுபட்டுள்ள விவசாய மக்களையும் மதிக்கிறோம். தேர்தலுக்கு முன்பும் பின்பும் நாட்டுக்கு உணவளிப்பது விவசாயிகளாகும்.
புதிய நீர்ப்பாசனத் திட்டங்களை முன்னெடுக்க தேவையில்லை எனப் பலர் கூறினாலும், புதிய நீர்ப்பாசனத் திட்டங்களைச் செயற்படுத்தி வானத்திலிருந்து விழும் மழைத்துளிகள் கடலுக்குச் சென்றடையாத வகையில் நீர்ப்பாசனக் கலாசாரத்தை வலுப்படுத்த வேண்டும். களு கங்கை, நில்வளா போன்ற ஆறுகளின் நீர் வீணாகக் கடலுக்குச் செல்வதை தடுத்து, எமது நீர்ப்பாசனத் திட்டங்களை வலுப்படுத்த வேண்டும். மனித உரிமையாகக் கருதக்கூடிய விவசாயத்தை அடிப்படை உரிமையாகப் பாதுகாப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருக்கிறோம்.
விவசாயத்தைப் பற்றிப் பேசும் போது, இன்று விவசாய உற்பத்திச் சங்கிலியின் ஒவ்வொரு கட்டத்திலும் பாரிய நெருக்கடி காணப்படுகின்றது. விதைகள் முதல் உரம், எரிபொருள், விவசாய இரசாயனங்கள், இயந்திர உபகரணங்களின் விலைகள், யானை-மனித மோதல் போன்ற பல பிரச்சினைகளுக்கு மத்தியில், தங்க நகைகள் மற்றும் சொத்துக்களை அடகு வைத்து விவசாய நடவடிக்கைகளை இவர்கள் செய்து வந்தாலும், உற்பத்திச் சங்கிலியில் அரசாங்கத்தின் தலையீடு மட்டுப்படுத்தப்பட்ட மட்டத்திலயே காணப்படுகிறது. விவசாயத்தை வலுப்படுத்த மலிவு விலையில் தரமான உரம் மற்றும் விதைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியில் விவசாயம் செய்தாலும் நிலையான விலை விவசாயிகளுக்கு கிடைத்தபாடில்லை. தேர்தல் காலத்தில் அமைச்சர்கள் வயல்களில் இறங்கி, நெல்லைத் தின்று காட்டி உத்தரவாத விலையைப் பெற்றுத் தருவோம் எனக் கூறினாலும், இன்றுவரை அது கிடைக்கவில்லை.
இன்று விவசாயம் செய்வதற்கான செலவு மற்றும் விரயம் அதிகமாக காணப்படுவதோடு, செலவுக்கு ஏற்ற வருமானம் விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. வறுமை குறித்து ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், விவசாய மக்களும் அதற்குள் அடங்குவர் என்பதால், விவசாயத்திற்கு முன்னுரிமை பெற்றுக் கொடுத்து, அதனை நவீனமயமாக்கி, புதிய தொழில்நுட்பத்தைப் பெற்றுக் கொடுக்கும், உற்பத்திச் சங்கிலியில் அரச தலையீடு அவசியமாகிறது. வரையறுக்கப்பட்ட காணியில் இருந்து அறுவடைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
'ஸ்மார்ட் விவசாயியை உருவாக்குவதே ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையாகும். இங்கு பாரம்பரிய எண்ணக்கருக்களை பாதுகாத்து, நவீன உலகிற்கு ஏற்ப விவசாயத்தில் நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். இவ்வாறானதொரு விவசாயப் பிரகடனத்தில் கையெழுத்திடத் தயார். கற்பனை உலகை விடுத்து, செய்யக்கூடிய, செய்ய வேண்டியவை குறித்த ஒரு உடன்படிக்கையில் கையெழுத்திட்டு, அதனைச் சட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்த நாம் தயார்.
தற்போது விவசாயம் செய்வதற்கு ஏற்படும் செலவைக் கணக்கிடுதல் முறையாக நடப்பதில்லை. நெல் விவசாயத்தில் ஒரு கிலோ நெல்லுக்கான உற்பத்திச் செலவு 85 ரூபா என்று கூறி, தற்போது அது 137 ரூபா எனத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் உத்தரவாத நெல் விலை 120 ரூபா என்பதால் விவசாயி உண்மையில் நட்டமடைவதையே இது காட்டுகிறது என்றார்.





