கைதிகள் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு பணிப்பு
1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் தனக்குள்ள சட்டப்பூர்வ அதிகாரங்களை மீண்டும் உறுதிப்படுத்த விரும்புகிறது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏனைய சிறைச்சாலைகளில் பதிவான சம்பவங்கள் குறித்து ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும், சிறைக்கைதிகளைப் பாதுகாப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு , சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு பணிப்புரைவிடுத்துள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து ஏனைய பல சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகள் சித்திரவதைகளுக்கும் ஏனைய சித்திரவதை வடிவங்களிலான மோசமான நடத்தைகளுக்கும் உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து ஆணைக்குழு தனது கடுமையான கவலையை வெளியிட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது. மேலும், வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்த கைதி ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்தும், கடந்த 7ஆம் திகதி இரவு வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்ற இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உடனடி மறுமொழிப் பிரிவினருக்கு அனுமதி மறுக்கப்பட்டமை குறித்தும் ஆணைக்குழு கவலை வெளியிட்டுள்ளது.
1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் தனக்குள்ள சட்டப்பூர்வ அதிகாரங்களை மீண்டும் உறுதிப்படுத்த விரும்புகிறது. அனைத்து சிறைச்சாலைகளுக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு கட்டுப்பாடற்ற அனுமதியை உறுதிப்படுத்துமாறும், பழிவாங்கல்களிலிருந்து கைதிகளைப் பாதுகாக்குமாறும், தொடர்புடைய அனைத்து ஆதாரங்களையும் பாதுகாக்குமாறும், குற்றச்சாட்டுகள் குறித்து விரைவான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்குமாறும், அத்துடன் ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு முழுமையாக ஒத்துழைக்குமாறும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





