ஜோன்ஸ்டனுக்கும் இளைய மகனுக்கும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியல்
வத்தளை நீதிவான் காஞ்சனா நெரஞ்சனா ஜி. சில்வா இதற்கான உத்தரவை 05-01-2026 அன்று பிறப்பித்தார்.
அரச சொத்தை துஷ்பிரயோகம் செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியமை மற்றும் உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இளைய மகன் ஜெரோம் கெனோட் பெர்னாண்டோ ஆகியோரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வெலிசறை வத்தளை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. வத்தளை நீதிவான் காஞ்சனா நெரஞ்சனா ஜி. சில்வா இதற்கான உத்தரவை 05-01-2026 அன்று பிறப்பித்தார்.
கோட்டையில் அமைந்துள்ள நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அலுவலகத்திற்குச் சென்று நேற்று காலை முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இளைய மகன் ஆகியோர் சரணடைந்தனர். இதனைத் தொடர்ந்து அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர், நிதிக்குற்ற புலனாய்வுப் பிரிவினர் அவர்களை வெலிசரையில் அமைந்துள்ள வத்தளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். இதன்போதே அவர்களை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஏற்கனவே இந்த விவகாரத்தில் முதலாவது சந்தேகநபர் கடந்த 2016 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, வத்தளை நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 2025 டிசம்பர் 31 ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மூத்த மகன் ஜகான் பெர்னாண்டோ மற்றும் சதோச நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் மொஹம்மட் ஷாபிர் ஆகியோரும், கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சத்தோச முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் ரன்மல ஆகியோரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான பின்னணியிலேயே நேற்றைய தினம் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இளைய மகன் ஆகியோர் சந்தேகநபர்களாக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிதிக்குற்ற புலனாய்வு பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் அனுரங்க தலைமையிலான குழுவினர் அவர்களுக்கு எதிரான விடயங்களை நீதிமன்றில் முன்வைத்தனர். குறிப்பாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன்மாரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனத்தினூடாக வாசனைத் திரவியங்கள் மற்றும் கிருமித் தொற்று நீக்கிகளை உற்பத்தி செய்வதாகக் கூறி, எத்தனோல் ஒரு தொகை இறக்குமதி செய்யப்பட்டு அது மதுபான உற்பத்திக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.





