16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவதை தடுக்க கலந்துரையாடல்
புதிய கல்விக் கொள்கையில் நிகழ்நிலை பாதுகாப்பு தொடர்பில் விசேட விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதற்கமைய 750 ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவதை தடை செய்தல் அல்லது வரையறுத்தல் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கொள்கை அடிப்படையில் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளது. நிகழ்நிலை பாதுகாப்பு தொடர்பில் புதிய கல்வி கொள்கையில் பிரத்தியேகமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 08-07-2026அன்று நடைபெற்ற அமர்வின்போது பிரதமருடனான கேள்வி நேரத்தின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது: சமூக வலைத்தளங்களில் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளில் இருந்து சிறுவர்களை பாதுகாப்பதற்காக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசேட கவனம் செலுத்தியுள்ளது.இதற்கமைய 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை தடை செய்வதற்கோ அல்லது வரையறை விதிப்பதற்கோ அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கையில் நிகழ்நிலை பாதுகாப்பு தொடர்பில் விசேட விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதற்கமைய 750 ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளன.இதற்கமைய எதிர்வரும் காலப்பகுதிகளில் ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் கல்வி முறைமை மற்றும் நிகழ்நிலை பாதுகாப்பு குறித்து பயிற்சியளிக்கப்படும்.
சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.இதற்கமைய சைபர் பாதுகாப்பு மற்றும் நிகழ்நிலை பாதுகாப்பு தொடர்பில் விசேட செயலணி நியமிக்கப்பட்டுள்ளது.இந்த செயலணி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் தமது கடமைகளை முன்னெடுக்கும் என்றார்.





