அரசாங்க ஊடக அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி திட்டம்
அனுபவக் கற்றல் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த பிரதிநிதிகள் குழு கலிங்கா தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் , ஒடிசா மாநில அனர்த்த முகாமைத்துவ அதிகாரசபை மற்றும் கலிங்கா அரங்கம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களுக்கு விஜயம் மேற்கொண்டது.
அரசாங்க ஊடக அதிகாரிகளை கொண்ட 30 பேர் கொண்ட இலங்கை பிரதிநிதிகள் குழு, சிறப்பு பயிற்சித் திட்டத்தில் பங்கேற்பதற்காக 2025 ஆகஸ்ட் 17 முதல் 30 வரை இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்தது.
இந்த பிரதிநிதிகள் குழுவில் பிரதமரின் ஊடகப் பிரிவு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் அரசாங்க தகவல் திணைக்களம் , உட்பட மாவட்ட ஊடகப் பிரிவுகளின் பிரதிநிதிகள் ஆகியோர் உள்வாங்கப்பட்டிருந்தனர்.
இந்த திட்டம், 2025 ஏப்ரலில் இலங்கைக்கான அண்மைய விஜயத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் வெளியிடப்பட்ட அறிவித்தலுக்கு அமைய, இலங்கை நிபுணர்களுக்காக வருடாந்தம் 700 பயிற்சி இடங்களை வழங்குவதற்காக ஒழுங்கமைக்கப்பட்டதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு வார கால பயிற்சித் திட்டம், இலங்கை அரசாங்க தகவல் திணைக்களத்தின் கோரிக்கைக்கு அமைய இந்திய அரசாங்கத்தால் ஒழுங்கமைக்கப்பட்டது. இது சுஷ்மா ஸ்வராஜ் வெளிநாட்டு சேவை நிறுவனம் , இந்திய வெகுசனத் தொடர்பு நிறுவனம் மற்றும் ஊடக தகவல் பணியகம் உள்ளிட்ட முன்னணி இந்திய நிறுவனங்களால் நடத்தப்பட்டது. இந்த பயிற்சித் திட்டத்தில் பொது இராஜதந்திரம், பத்திரிகை உறவுகள், டிஜிட்டல் ஊடக நடைமுறைகள் மற்றும் ஊடக முகாமைத்துவம் ஆகியவை தொடர்பிலான கலந்துரையாடல் அமர்வுகள் இடம்பெற்றன.
அனுபவக் கற்றல் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த பிரதிநிதிகள் குழு கலிங்கா தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் , ஒடிசா மாநில அனர்த்த முகாமைத்துவ அதிகாரசபை மற்றும் கலிங்கா அரங்கம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களுக்கு விஜயம் மேற்கொண்டது. அவர்கள் ஒடிசாவின் முதலமைச்சரையும் சந்தித்தனர், அங்கு ஊடகம் மற்றும் பொதுத் தொடர்புகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
தொழில்முறைப் பயிற்சிக்கு அப்பால், இந்த திட்டம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு திறன் உட்பட தொழில்நுட்ப முன்னேற்றங்கள், மற்றும் அதன் துடிப்பான சுற்றுலாத் துறை, இந்தியாவின் வளமான கலாசார பாரம்பரியம் மற்றும் அன்பான விருந்தோம்பலை அனுபவிப்பதற்கான வாய்ப்புகளையும் வழங்கியது.
இலங்கை அரசாங்க ஊடக அதிகாரிகளுக்கான சிறப்புப் பயிற்சித் திட்டம், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஊடகம் மற்றும் தொடர்பாடல் துறையில் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதற்கும், அறிவுப் பகிர்வு மற்றும் நிறுவன இணைப்புகளை மேம்படுத்துவதற்கும் மேலும் பங்களித்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகரம் மேலும் தெரிவித்துள்ளது.





