ஆயுத பரிகரணம் குறித்த ஜெனிவா கூட்டத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் அறிவிப்பு
எதிர்கால சந்ததியினருக்கான பாதுகாப்பானதும், ஸ்திரமானதுமான உலகைக் கட்டியெழுப்புவதே எம்மனைவரினதும் உறுதியான இலக்காக காணப்படவேண்டும்.
தற்போது நிலவும் பூகோள அரசியல் நெருக்கடிகள் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீது பாரிய சவால்களைத் தோற்றுவித்திருப்பதுடன் பல்தரப்புக்களிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆயுதப்பரிகரண (ஆயுதக்குறைப்பு) முயற்சிகளுக்கு இடையூறு விளைவித்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், எதிர்கால சந்ததியினருக்கான பாதுகாப்பானதும், ஸ்திரமானதுமான உலகைக் கட்டியெழுப்புவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் ஆயுதப் பரிகரண முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவை வழங்க தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் 23-02-2026 அன்று ஆரம்பமான ஆயுதப்பரிகரணம் (ஆயுதக்குறைப்பு) தொடர்பான அக்கூட்டத்தில் இலங்கை சார்பில் நிகழ்நிலை முறைமையில் கலந்துகொண்டு உரையாற்றிய வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், அங்கு மேலும் கூறியதாவது:
2026 ஆம் ஆண்டுக்கான ஆயுதப்பரிகரணம் தொடர்பான மாநாட்டின் தலைமைப்பொறுப்பை ஏற்றிருக்கும் மொரோக்கோ நாட்டின் தூதுவரும் நிரந்தர வதிவிடப்பிரதிநிதியுமான ஓமர் ஸ்னிபருக்கு எனது வாழ்த்தைத் தெரிவிக்கும் அதேவேளை, இக்காலப்பகுதியில் உரிய சகல பணிகளையும் வெற்றிகரமாக நிறைவுசெய்வதற்கு அவசியமான முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு இலங்கை தயாராக இருக்கிறது.
தற்போதைய உலகளாவிய நிலைவரங்களை அவதானிக்கையில், அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவேண்டியது மிக அவசியம் என்பது நன்கு வெளிப்பட்டிருக்கிறது. இருப்பினும் தற்போது நிலவும் பூகோள அரசியல் நெருக்கடிகள் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீது பாரிய சவால்களைத் தோற்றுவித்திருப்பதுடன் பல்தரப்புக்களிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆயுத பரிகரண முயற்சிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மனிதாபிமானத்துடன்கூடிய எதிர்காலத்தை உறுதிப்படுத்தவேண்டும் எனில், இவ்விடயத்தில் எம்மனைவரினதும் கூட்டு முயற்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும். அத்தோடு இவ்விடயத்தில் கூட்டிணைந்ததும் செயற்திறன்மிக்கதுமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு பரஸ்பர நம்பிக்கை மற்றும் கௌரவத்தைக் கட்டியெழுப்புவது இன்றியமையாததாகும். அதேபோன்று எதிர்கால சந்ததியினருக்கான பாதுகாப்பானதும், ஸ்திரமானதுமான உலகைக் கட்டியெழுப்புவதே எம்மனைவரினதும் உறுதியான இலக்காக காணப்படவேண்டும்.
அதேவேளை உலகளாவிய ஆயுதப்பரிகரண முயற்சிகளில் அபிவிருத்தி அடைந்துவரும் நாடு என்ற ரீதியில் இலங்கையின் துடிப்பான பங்களிப்பு குறித்து பெருமிதமடைகிறேன். மறுபுறம் இந்த உலகளாவிய ஆயுதப்பரிகரண இலக்கை அடைந்துகொள்வதற்கு உறுப்புநாடுகள் ஒவ்வொன்றும் பொறுப்புணர்வு மற்றும் அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாடு என்பவற்றை வெளிப்படுத்தவேண்டியது மிக அவசியமாகும் என வலியுறுத்தினார்.





