நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து மாற்றப்பட்ட கைதிகளின் மரணங்கள் குறித்த அவசர விசாரணை தேவை - சர்வதேச மன்னிப்புசபை
கைதிகளை சந்திக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முழுமையான அனுமதி வழங்கப்பட வேண்டும்.
நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து மாற்றப்பட்ட இரண்டு கைதிகளின் மரணங்கள் குறித்து அவசர மற்றும் சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புசபை வலியுறுத்தியுள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டு சர்வதேச மன்னிப்புசபை இதனை வலியுறுத்தியுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
இந்த மரணங்கள் குறித்த தகவல்களும், இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகள் சித்திரவதை மற்றும் ஏனைய மோசமான நடத்தைகளுக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளும் ஆழ்ந்த கவலையளிக்கின்றன. இந்தக் கைதிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு உள்ளது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து மரணங்கள் குறித்தும் உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும்.
கைதிகளை சந்திக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முழுமையான அனுமதி வழங்கப்பட வேண்டும். அத்துடன், சட்டத்தரணிகள் தங்களது சேவை பெறுநர்களை சந்திக்க அனுமதிக்கப்பட வேண்டும். குடும்ப உறுப்பினர்களுக்குப் பார்வையிட அனுமதி வழங்கப்பட வேண்டும். மருத்துவ சிகிச்சை தேவைப்படும் கைதிகளுக்குத் தாமதமின்றி சிகிச்சையளிக்கப்பட வேண்டும்.
மேலும், நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை குறித்து விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள மூவரடங்கிய குழு, உயிரிழப்பை ஏற்படுத்திய பலப்பிரயோகம் தொடர்பான சூழ்நிலைகள் குறித்து பக்கச்சார்பற்ற, சுயாதீனமான மற்றும் வெளிப்படையான விசாரணையை முன்னெடுப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





