மாகாண சபைத்தேர்தலை பழைய முறையில் நடத்த தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் இணக்கம் - ஆவணத்திலும் கைச்சாத்து
இடை நிறுத்தப்பட்டிருக்கும் மாகாணசபை தேர்தலை தற்காலிகமாகவேனும் பழைய முறையில் நடத்துவதற்கு அனைத்து அரசிியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்தனர்.
இடை நிறுத்தப்பட்டிருக்கும் மாகாணசபை தேர்தலை தற்காலிகமாகவேனும் பழைய முறையில் நடத்துவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் எடுத்த தீர்மானத்திற்கு தேசிய மக்கள் கட்சியின் செயலாளர் வைத்தியர் நிஹால் அபேசிங்க இணக்கம் தெரிவித்ததுடன் அதுதொர்பில் தயாரிக்கப்பட்ட ஆவணத்திலும் கைச்சாத்திட்டார்.
இடைநிறுத்தப்பட்டிருக்கும் மாகாணசபை தேர்தலை எந்த முறையில் நடத்துவது என அரசியல் கட்சிகளின் கருத்துக்களை கேட்டறிவதற்காக பெப்ரல் அமைப்பு ஏற்பாடு செய்த கலந்துரையாடல் 26-05-2026அன்றுஇடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தாத ஐம்பதிற்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது கலந்துரையாடலை ஆரம்பித்துவைக்கும் வகையில் கருத்து தெரிவித்த, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ராேஹன ஹெட்டியாரச்சி குறிப்பிடுகையில், மாகாண சபை தேர்தல் இறுதியாக 2014ஆம் ஆண்டு ஊவா மாகாணசபை தேர்தல் இடம்பெற்றது. வடக்கு கிழக்கு மாகாணசபை ஆட்சிக்காலம் 2017ஆம் ஆண்டு நிறைவடைந்தது. சுமார் 3ஆட்சிக்காலங்கள் மாகாணசபை தேர்தல் நடத்தப்படாமல் இருக்கிறது.
அதனால் இதற்கான பொறுப்பை ஆட்சியில் இருந்த அனைத்து அரசியல் கட்சிகளும் பொறுப்புக்கூற வேண்டும். தற்போது இந்த பொறுப்பு தேசிய மக்கள் சக்திக்கு இருக்கிறது. அதனால் மாகாணசபை தேர்தலை விரைவாக நடத்துவதற்கு அரசியல் கட்சிகளின் ஆலாேசனைகளை பெற்றுக்கொள்ளவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதனால் இதுதொடர்பில் உங்களது கருத்துக்களை முன்வையுங்கள் என்றார்.
இதன்போது இடை நிறுத்தப்பட்டிருக்கும் மாகாணசபை தேர்தலை தற்காலிகமாகவேனும் பழைய முறையில் நடத்துவதற்கு அனைத்து அரசிியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்தனர். அத்துடன் இது தொடர்பில் மாகாணசபை தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு இந்த தீர்மானத்தை கையளிப்பதற்கும் தீர்மானித்து, அது தொடர்பில் தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் அனைவரும் கைச்சாத்திட்டனர்.
இதன்போது அந்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த, தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் வைத்தியர் நிஹால் அபேசிங்கவும் அதற்கு இணக்கம் தெரிவித்திருந்ததுடன் குறித்த ஆவணத்திலும் சைச்சாத்திட்டார்.





