மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் இலக்கு - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
அந்த நீடிக்கப்பட்ட காலமும் நிறைவடைந்த பின்னர், தேர்தலை நடத்துவதற்கு போதிய நிதி இல்லை எனக் கூறி, உள்ளுராட்சிமன்றத் தேர்தல் பல வருடங்களாக காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
மாகாணசபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் முதன்மை இலக்காகும். அதற்கான நிதிச் சிக்கல்கள் ஏதுமில்லை. எனினும், தேர்தல் முறைமை தொடர்பான சட்டச் சிக்கல்களுக்கு பாராளுமன்றத் தெரிவுக்குழு ஊடாகத் தீர்வு காணப்பட்டவுடனேயே தேர்தல் நடத்தப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு 26-05-2026அன்று கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கத்தின் எதிர்பார்ப்பும் இலக்கும் வெகுவிரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாகும். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த கடந்த 8 மாதங்களுக்குள் இரு பிரதான தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களின் ஆயுட்காலம் 2022ஆம் ஆண்டுடன் நிறைவடைந்தது. அதன் பின்னர், அமைச்சருக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி அவற்றின் ஆயுட்காலம் மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டது.
அந்த நீடிக்கப்பட்ட காலமும் நிறைவடைந்த பின்னர், தேர்தலை நடத்துவதற்கு போதிய நிதி இல்லை எனக் கூறி, உள்ளுராட்சிமன்றத் தேர்தல் பல வருடங்களாக காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. எனினும், பல்வேறு தடைகளுக்கு மத்தியில் நாம் கடந்த 2025ஆம் ஆண்டு அந்தத் தேர்தலை நடத்தினோம்.
எனவே, எமது அரசாங்கத்தின் பிரதான எதிர்பார்ப்பு அரசியலமைப்பிற்கு அமைய மக்கள் இறையாண்மையை உறுதிப்படுத்தி, மாகாண சபைத் தேர்தலை மிக விரைவில் நடத்துவதாகும். உள்ளுராட்சிமன்றத் தேர்தலுடன் இணைத்தோ அல்லது அதற்கு முன்னராகவோ மாகாண சபைத் தேர்தலை நடத்த முடிந்திருந்தால் அது மிகவும் சிறந்ததாக அமைந்திருக்கும்.
மேலும், இத்தேர்தலை நடத்துவதில் அரசாங்கத்துக்கு எவ்வித நிதிப் பிரச்சினைகளும் இல்லை. இதற்கான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அவ்வாறு நிதி ஒதுக்கப்படாவிட்டாலும் கூட, பாராளுமன்றத்தில் துணை மதிப்பீட்டு ஒதுக்கீட்டின் மூலம் தேர்தலுக்கான நிதியைப் பெற்றுக்கொள்ள முடியும். விரைவில் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் விருப்பமாக இருந்தாலும், அதற்கான சட்ட ரீதியான சில சிக்கல்கள் காணப்படுகின்றன. இந்தச் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழு தற்போது தீவிரமாகச் செயற்பட்டு வருகிறது.
மாகாண சபைத் தேர்தலுக்கான தேர்தல் முறைமை தொடர்பில் புதிய சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போதிலும், அது முழுமையாக நிறைவடையாத காரணத்தினால் அந்த முறைமையின் கீழ் தேர்தலை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்தச் சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்டவுடன் மாகாண சபைத் தேர்தல் விரைவாக நடத்தப்படும் என்றார்.





