சுவிஸ் தூதுவருடன் அமைச்சர் பிமல் சந்திப்பு
இலங்கைக்கான சுவிஸ் தூதுவராக மூன்று ஆண்டுகள் பணியாற்றிய சிறி வோல்ட், தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து நாட்டிலிருந்து புறப்படவுள்ள நிலையிலேயே இச்சந்திப்பு நடைபெற்றது.
தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வரும் ஊழல் ஒழிப்பு மற்றும் நல்லாட்சி கொள்கைகள் காரணமாக, சர்வதேச முதலீட்டாளர்கள், குறிப்பாக சுவிஸ் முதலீட்டாளர் சமூகம் மத்தியில் இலங்கை மீதான நம்பிக்கை அதிகரித்து வருகின்றமை குறித்து சுவிட்சர்லாந்து தூதுவருடன் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கலந்துரையாடினார்.
இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிறி வோல்ட்டை அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்து உரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் ஜஸ்டின் பொய்லெட் மற்றும் தூதரக அதிகாரி கனிஷ்க ரத்னப்பிரிய ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இலங்கைக்கான சுவிஸ் தூதுவராக மூன்று ஆண்டுகள் பணியாற்றிய சிறி வோல்ட், தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து நாட்டிலிருந்து புறப்படவுள்ள நிலையிலேயே இச்சந்திப்பு நடைபெற்றது.
அத்துடன்,இச்சந்திப்பில் வட மாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் புலம்பெயர்ந்த வெளிநாட்டு இலங்கையர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு இந்த ஆண்டுடன் 70 ஆண்டுகள் நிறைவடையும் ஒரு விசேட ஆண்டாகும் என்பதை நினைவுகூர்ந்த தூதுவர், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தினார்.
இதன்போது, தூதுவர் சிறி வோல்ட்டின் எதிர்காலப் பணிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த அமைச்சர் பிமல் இலங்கைக்கு ஆற்றிய சேவைக்காக நன்றியையும் தெரிவித்தார்.





