அமெரிக்காவின் இராணுவ தலையீட்டை வன்மையாக கண்டிக்கிறோம்: வெளிவிவகார அமைச்சர் விஜித
கட்சி ரீதியாகவன்றி, அரசாங்கத்தின் நிலைப்பாடு இன்னமும் அறிவிக்கப்படவில்லை என மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டது.
வெனிசுவேலாவுக்கு எதிராக அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்ட இராணுவத்தலையீட்டை அரசாங்கம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடு என்ற ரீதியில், அதன் இறையாண்மையை மீறுவதற்கு எந்தவொரு வல்லரசுக்கும் உரிமை கிடையாது எனவும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாற்றம் குறித்தும், இவ்வருடத்துக்கான இலக்கு மற்றும் செயற்பாடுகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தும் நோக்கிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று 05-01-2026அன்று வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திர மற்றும் அமைச்சின்கீழ் இயங்கிவரும் முக்கிய கட்டமைப்புக்களுக்கான பொறுப்பதிகாரிகளின் பங்கேற்புடன் அமைச்சின் கட்டடத்தொகுதியில் நடைபெற்றது.
இதன்போது வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்று ஊடகவியலாளர் ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டது.
ஏற்கனவே இதுகுறித்து மக்கள் விடுதலை முன்னணியினால் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட அறிக்கையில், 'வெனிசுவேலாவுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட இராணுவ தலையீட்டை வன்மையாகக் கண்டிக்கின்றோம். அந்த நாட்டின் இறையாண்மையை வொஷிங்டன் மீறுகின்றது. ஆட்சியாளர்கள் யார் என்பதைத் தீர்மானிக்கும் வெனிசுவேலா மக்களின் இறையாண்மையை மீறுவதற்கு எந்தவொரு வல்லரசுக்கும் உரிமை இல்லை' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, தாம் ஏற்கனவே அதுபற்றிய நிலைப்பாட்டை அறிவித்துவிட்டதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் பதிலளித்தார்.
இருப்பினும் கட்சி ரீதியாகவன்றி, அரசாங்கத்தின் நிலைப்பாடு இன்னமும் அறிவிக்கப்படவில்லை என மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், வெனிசுவேலாவுக்கு எதிராக அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ தலையீட்டை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும், ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடு என்ற ரீதியில், அதன் இறையாண்மையை மீறுவதற்கு எந்தவொரு வல்லரசுக்கும் உரிமை கிடையாது எனவும் தெரிவித்தார்.





