சந்தை சக்திகளுக்கு ஏற்ற செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி அபாயமானது - கலாநிதி ஹன்ஸ் விஜயசூரிய
எமது குறிக்கோள் என்பது தகவல்களை கிடைக்கச் செய்வதோடு மட்டும் நின்றுவிடக் கூடாது.
செயற்கை நுண்ணறிவு என்பது முற்றிலும் சந்தை சக்திகளுக்கு ஏற்ப மட்டுமே வளர்ச்சியடைந்தால், உலகின் குறைந்த வளங்களைக் கொண்ட பல மொழிகளும், அவற்றின் இன மற்றும் கலாசாரச் சூழல்களும் புறக்கணிக்கப்படும் அபாயம் உள்ளது. என்று டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி ஹன்ஸ் விஜயசூரிய தெரிவித்தார்.
ஜெனிவாவில் நடைபெற்ற 2026 உலக தகவல் சமூக உச்சிமாநாட்டின் 'தலைவர்கள் கலந்துரையாடல்' அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், ஒவ்வொரு பெரிய தொழில்நுட்பப் புரட்சியும் அறிவைப் பெற்றுக்கொள்வதற்கான தடைகளைக் குறைத்துள்ளன. ஆனால், அவை எப்போதும் அனைவருக்கும் சமமானதாக இருந்ததில்லை.
இணையம் என்பது தகவல்களைப் பெற்றுக்கொள்வதை ஜனநாயகப்படுத்தியது உண்மை தான். ஆனால், மொழி, எழுத்தறிவு மற்றும் இணைய இணைப்பு போன்ற காரணிகளே அதிலிருந்து யார் முழுமையாகப் பயனடையலாம் என்பதைத் தீர்மானித்தன.
இப்போது, செயற்கை நுண்ணறிவு என்பது இயற்கையான தகவல் தொடர்பு மூலம் அறிவையும் புரிதலையும் எளிமையாகப் பெற்றுக்கொள்வதை ஜனநாயகப்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது. அத்துடன், அது மொழி, சூழல் மற்றும் தனிநபர்களின் தேவைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளக்கூடியது.
இந்த செயற்கை நுண்ணறிவு புரட்சிகரமானது ஆனால், செயற்கை நுண்ணறிவு என்பது முற்றிலும் சந்தை சக்திகளுக்கு ஏற்ப மட்டுமே வளர்ச்சியடைந்தால், அது வணிக ரீதியாக மிகவும் ஈர்க்கக்கூடிய சந்தைகளுக்கும், அதற்குரிய மொழி வடிவங்களுக்கும் மட்டுமே இயற்கையாகவே முன்னுரிமை அளிக்கும். மேலும், அது உயர்மட்டத் தரவுத்தொகுப்புகளைக் கொண்டு பயிற்சி பெற்று, வசதி படைத்த மற்றும் ஒரே மாதிரியான சமூகங்களின் சூழலில் இருந்தே முடிவுகளைக் கற்றறியும்.
இதனால், உலகின் குறைந்த வளங்களைக் கொண்ட பல மொழிகளும், அவற்றின் இன மற்றும் கலாசாரச் சூழல்களும் புறக்கணிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, அனைவரையும் உள்ளடக்கிய செயற்கை நுண்ணறிவு என்பது வெறும் பன்மொழித் திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவாக மட்டும் இருக்க முடியாது. அது கலாசார ரீதியாகவும் அனைவரையும் உள்ளடக்கிய செயற்கை நுண்ணறிவாக இருக்க வேண்டும்.
அதாவது, உள்ளுர் சூழலையும் அறிவையும் தன்னுள் பதித்து, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகால வரலாறு மற்றும் நாகரிகத்திலிருந்து அறிவைப் பெற்று, சமூகங்களின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் தொழில்நுட்பமாக அது இருக்க வேண்டும்.
2500 ஆண்டுகாலப் பதிவுசெய்யப்பட்ட வரலாற்றைக் கொண்ட, பன்மொழி மற்றும் பல்லின சமூகப் பின்னணியைக் கொண்ட இலங்கையின் 'செயற்கை நுண்ணறிவுக்கு முதலிடம்' என்ற டிஜிட்டல் உருமாற்றமானது, இதிலுள்ள வாய்ப்பையும் சவாலையும் ஒரே நேரத்தில் விளக்குகிறது.
இலங்கையின் ஒட்டுமொத்தப் பொருளாதார டிஜிட்டல் உருமாற்ற வரைபடமானது, மொழிச் சமன்பாட்டுத் திறன்களை கிடைமட்ட டிஜிட்டல் பொதுக் கட்டமைப்புகளாக நிலைநிறுத்துகிறது.
இன மற்றும் கலாசார நுணுக்கங்களைக் கிரகிக்கும் வகையிலான யுஐ டிஜிட்டல் பொதுக் கட்டமைப்புகளை பயன்படுத்தவும் நாங்கள் விரும்புகிறோம்.
இந்த மாதிரியின் முதலாவது வடிவமானது, மக்களுடன் இயற்கையான உரையாடல்கள் மூலம் தொடர்புகொள்ளும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் 'அரசாங்க தகவல் நிலையத்தின்;' ஊடாக, மக்களுக்கான சேவைகளை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கும்.
ஒரு விவசாயி விவசாய- செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் தொடர்புகொள்வார், ஒரு குழந்தை ஒரு கற்பிக்கும் ஆசிரியரை அணுகும். இவை அனைத்தும் இயற்கையான மற்றும் சூழலுக்கு ஏற்றவாறு செழுமைப்படுத்தப்பட்ட உரையாடல்களின் மூலம் சாத்தியமாகும். மாற்றுத்திறனாளிகள் தங்களின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கக்கூடிய மாதிரிகளைப் பயன்படுத்துவார்கள்.
டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்ட இத்தகைய அணுகுமுறை, தலைமுறை தலைமுறையாக நிலவி வரும் தடைகளைக் குறைக்கும். சுயாதீன செயற்கை நுண்ணறிவை சமமாக அணுக முடியாமை, இந்த அனைவரையும் உள்ளடக்கிய செயற்கை நுண்ணறிவு என்ற இலட்சியத்துக்கு சவாலாக அமைகிறது.
சிறிய மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் தங்களுக்குரிய சுயாதிக்க செயற்கை நுண்ணறிவின் குறைந்தபட்ச அளவையாவது அணுகுவதை கூட்டு நடவடிக்கை மூலம் உறுதி செய்ய வேண்டும். அப்போது தான் அவர்கள் தங்களின் தரவுத் தனியுரிமை, கொள்கை சுயாட்சி அல்லது தேசிய நெகிழ்ச்சித்திறன் ஆகியவற்றை சமரசம் செய்யாமல், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தங்களுக்கு ஏற்றவாறு உள்ளூர்மயமாக்க முடியும்.
எமது குறிக்கோள் என்பது தகவல்களை கிடைக்கச் செய்வதோடு மட்டும் நின்றுவிடக் கூடாது. ஒரு நபர் பேசும் மொழி, அவரது திறன்கள் அல்லது அவர் பிறந்த சூழ்நிலைகள் எவையாக இருந்தாலும், ஒவ்வொருவராலும் அந்தத் தகவல்களைப் புரிந்துகொள்ளவும், அதிலிருந்து பயனடையவும் முடிவதை உறுதி செய்வதாக இருக்க வேண்டும்.
இந்தத் தெரிவுகளை நாம் இன்று நடைமுறைப்படுத்தினால், செயற்கை நுண்ணறிவு என்பது சமத்துவமின்மைக்கான மற்றுமொரு காரணியாக மாறாமல், மனித மேம்பாட்டிற்கும் வாய்ப்புகளின் சமத்துவத்திற்கும் உலகம் கண்டிராத மிக சக்திவாய்ந்ததொரு கருவியாக மாறும் என்றார்.





