சொத்து சேதங்கள் குறித்து விசாரணை செய்ய குழுவொன்று நியமனம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளில் பெரும்பான்மையானோர் தற்காலிகமாக பிற சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடக ஊடகப்பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.
அத்துடன் புனரமைப்புப் பணிகளுக்காக நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த பெண் கைதிகள் அனைவரும் ஏனைய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்னும் சுமார் 700 ஆண் கைதிகள் உள்ளனர். நீர்கொழும்பு சிறைச்சாலையை கைதிகள் எவருமற்ற ஒரு வலயமாக மாற்றுவதற்காக, அந்த கைதிகளும் பிற சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.
கைதிகளால் சேதப்படுத்தப்பட்ட இந்த சிறைச்சாலை வளாகம், அனைத்து கைதிகளும் இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர் புனரமைப்புப் பணிகளுக்கு உட்படுத்தப்படும். தற்போது சிறைச்சாலையில் ஏற்பட்ட சேதங்கள் சம்பந்தமாக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நீர்கொழும்பு சிறைச்சாலையில் 2,400 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் ஏற்பட்ட மோதலில் 8 சிறைச்சாலை அதிகாரிகளும் 21 கைதிகளும் உயிரிழந்ததுடன், மேலும் சுமார் 100 பேர் காயமடைந்தனர்.
இந்த மோதலின் போது நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகம் கடுமையான சேதங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் கைதிகளைத் தங்க வைப்பதற்கு அது பொறுத்தமான சூழல் அல்ல.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளில் பெரும்பான்மையானோர் தற்காலிகமாக பிற சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பாதுகாப்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கும், கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், விசாரணைகள் நிறைவடைந்தவுடன் சிறைச்சாலை வளாகத்தின் புனரமைப்புப் பணிகளை விரைவாக ஆரம்பிப்பதற்கும் வசதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.





