பல்லின ஜனநாயகத்தை பாதுகாக்க ஒன்றுபடுங்கள்: ரணில் அழைப்பு
நாட்டின் சட்டத்தரணிகளை அச்சுறுத்தும் நடவடிக்கைகளை நாங்கள் காண்கிறோம்.
எங்கள் ஒவ்வொருவருக்கும் எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து, வழக்குகளில் சிக்க வைக்க முயற்சிக்கின்றனர்.பல்லின ஜனநாயக முறைமையை பாதுகாத்துக் கொள்ள நாங்கள் கட்டுப்பட்டிருக்கிறோம். அதற்காக நாங்கள் ஒன்றாக செயற்பட வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மக்கள் குரல் அமைப்பின் பிரதிநிதிகள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை 25-02-2026 அன்று கொழும்பில் அமைந்துள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடி இருந்தனர். இதன்போது அங்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ். மஹிந்த அமரவீர,அநுர பிரியதர்ஷன யாப்பா, உதய கம்பன்பில, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன, சுகீஷ்வர பண்டார ஆகியோரும் ஐக்கிய தேசிய கட்சி சார்ப்பில் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன, பொதுச் செயலாளர் தலதா அத்துகோரல, தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு மேலும் தெரிவிக்கையில், நாங்கள் அனைவரும் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள். நாங்கள் ஒன்றாக பணியாற்றியிருக்கின்றோம். எதிராகவும் பணியாற்றியிருக்கின்றோம். அது ஜனநாயகத்தின் ஒரு பகுதியாகும். நாங்கள் ஒன்றாக பணியாற்றினாலும் விவாதித்துக் கொண்டாலும் 1948 ஜனநாயகத்தை பாதுகாத்துக் கொண்டு இந்த நாட்டில் புதிய பொருளாதாரம் புதிய சமூகம் ஒன்றை ஏற்படுத்தி இருக்கின்றோம்.
அனைவருக்கும் கல்வி, சுகாதாரம் வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றோம். இது ஜனநாயகத்தின் ஒரு பகுதி ஆகும். இது தொடர்பில் நாங்களும் இந்தியாவும் மாத்திரமே இது தொடர்பான பெறுபேறுகளை காட்டிக் கொண்டிருக்கின்றோம். இதனை பாதுகாத்துக் கொள்வதே எமது அடிப்படையாக இருக்க வேண்டும்.
வேறு விடயங்கள் தொடர்பில் எங்களுக்குள் மாற்று கருத்துக்கள் இருந்தாலும் பொருளாதாரம் வெளிவிவகாரம் ,உள்நாட்டு அலுவல்கள் தொடர்பாகவும் பல்லின ஜனநாயக முறைமையை பாதுகாத்துக் கொள்ள நாங்கள் கட்டுப்பட்டிருக்கிறோம். எமது இணக்கப்பாடும் அங்குதான் இருக்கிறது.
நாட்டின் சட்டத்தரணிகளை அச்சுறுத்தும் நடவடிக்கைகளை நாங்கள் காண்கிறோம். அதேபோன்று சமூக வலைத்தளங்களில் ஒரு பகுதி முற்றாக மகா சங்க தேரர்களுக்கு எதிராக பாரிய வேலை திட்டம் ஒன்றை மேற்கொள்கின்றதை காண்கின்றோம். இவை அனைத்துக்கும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அது மாத்திரமல்லாது மக்களின் உரிமைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
எங்கள் ஒவ்வொருவருக்கும் எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து, வழக்குகளில் சிக்க வைக்க முயற்சிக்கின்றனர். கட்சிகள் செயல்படுவதை, சமூக ஊடகங்கள் செயற்படுவதை நிறுத்தவே பார்க்கின்றனர். நீதிமன்றங்களில் சட்டத்தரணிகளின் சுயாதீனத்தை இல்லாமல் செய்ய முயற்சிக்கின்றனர்.
இது தொடர்பில் நாங்கள் ஒன்றாக செயற்பட வேண்டும். உங்களுடன் இணைந்து செயல்பட எனதும் எனது கட்சியினதும் பூரண ஒத்துழைப்பை வழங்குவோம். இதனை பாதுகாத்துக் கொண்ட பின்னர் எது சரி இது பிழை என நாங்கள் விவாதிப்போம்.
எது சரி எது பிழை என தெரிவு செய்யும் ஜனநாயக உரிமை இந்த நாட்டு மக்களுக்கு இருக்க வேண்டும். அரசியல் கட்சிகள் தொழிற்சங்கங்கள் சட்டத்தரணிகளை அடக்குவதன் மூலம் இந்த முறைமை இல்லாமல் போகிறது. எமது கலாசாரத்தை மறக்க செய்கின்றனர்.
அதனால் இந்த விடயங்கள் தொடர்பில் நீங்கள் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எமது ஒத்துழைப்பு இருக்கிறது என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.





