பொதுமக்களை கேடயமாக வைத்து போராடுவதை நிறுத்த வேண்டும் கோடீஸ்வரன் எம்.பி.
பல கிலோ மீற்றர் தூரம் பயணித்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற முடியாமல் திரும்பிச் செல்வது கவலைக்குரிய விடயமே.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பொதுமக்களை பகடைக்காயாக வைத்து தமது தேவைகளை நிறைவேற்றுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். பொதுமக்களை கேடயமாக வைத்து போராடுவதை நிறுத்த வேண்டும். அவர்களின் போராட்டத்தால் நோயாளர்கள் பெரும் பாதிக்கப்படுகின்றனர் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 09-04-2026 அன்று நடைபெற்ற முப்படைச் சட்டங்களின் ஒழுங்குவிதிகள் மற்றும் அவசரகால சட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, நாட்டின் மிகவும் பாரிய பிரச்சினையாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காணப்படுகிறது. இவ்வாறான பணிப்பகிஸ்கரிப்பு போன்ற விடயங்கள் மக்களின் உயிருடன் விளையாடும், அவர்களின் வாழ்க்கையில் விளையாடும் செயற்பாடாகவே பார்க்கப்படுகின்றது. அந்த சங்கத்தினால் தமக்கு தேவையானவற்றை சுகாதார அமைச்சின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.
பொதுமக்களை பகடைக்காயாக வைத்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். பொதுமக்களை கேடயமாக வைத்து போராடுவதை நிறுத்த வேண்டும். இன்று நோயாளர்கள் பெரும் பாதிக்கப்படுகின்றனர். கிளினிக் சேவைக்கு மாதத்திற்கு ஒருதரம் வரும் நோயாளர்கள் சிகிச்சை பெற முடியாமல் திரும்புகின்றனர். பல கிலோ மீற்றர் தூரம் பயணித்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற முடியாமல் திரும்பிச் செல்வது கவலைக்குரிய விடயமே.
இதேவேளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள ரேடியோ தெரபி இயந்திரம் பழுந்தடைந்துள்ளது. அங்கு புற்றுநோயாளர்கள் சிகிச்சை பெற முடியாமல் இருக்கின்றனர். கடந்த மாதம் இந்த இயந்திரம் பழுதடைந்துள்ளதுடன்,இன்னும் அது சீர் செய்யப்படவில்லை. தேவையான சிகிச்சையை பெற்றுக்கொள்ள முடியாமல் அந்த வைத்தியசாலையை நம்பியிருக்கும் அந்த பிரதேச நோயாளர்கள் பெரும் பிரச்சினைகளை சந்திக்கின்றனர். இதனால் அந்த இயந்திரத்தை உடனடியாக திருத்துமாறு நான் சுகாதார அமைச்சை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.





