மண்சரிவில் புதையுண்டோருக்கான இறுதிச்சடங்குகளை நடத்தும் உரிமை குடும்பங்களுக்கு உண்டு: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
'ஒரு பிரதேசத்தில் மண்சரிவு அனர்த்தத்தினால் பெரும்பகுதி நிலம் முழுவதுமாக சேதமடைந்திருப்பின், அப்பகுதி முழுவதையும் தோண்டுவது சாத்தியமான விடயமல்ல.
அண்மையில் 'தித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தோருக்கு தமது பாரம்பரியம் மற்றும் நம்பிக்கைகளின் பிரகாரம் இறுதிச்சடங்குகளைச் செய்வதற்கான உரிமை அவர்களது குடும்பத்தாருக்கு இருப்பதாகவும், எனவே அவ்வாறு புதையுண்டோரின் சடலங்களை இயலுமானவரை தோண்டி எடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
கடந்த நவம்பர் மாத இறுதியில் 'தித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு அனர்த்தங்களில் சிக்கி பெரும் எண்ணிக்கையானோர் உயிரிழந்ததுடன், மண்ணுக்குள் புதையுண்ட பலரது உடல்கள் தற்போதுவரை கண்டறியப்படவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில் உயிரிழந்த தமது உறவுகளுக்கு தம்முடைய மத பாரம்பரியங்கள் மற்றும் நம்பிக்கையின்படி இறுதிச்சடங்குகளை மேற்கொள்வதற்கான உரிமை குடும்பங்களுக்கு இருப்பதாகவும், அதற்கு மதிப்பளிக்கப்படவேண்டும் எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
'ஒரு பிரதேசத்தில் மண்சரிவு அனர்த்தத்தினால் பெரும்பகுதி நிலம் முழுவதுமாக சேதமடைந்திருப்பின், அப்பகுதி முழுவதையும் தோண்டுவது சாத்தியமான விடயமல்ல. இருப்பினும் காலநிலை உள்ளடங்கலாக சூழ்நிலைகள் சாதகமாக அமையுமாயின், இவ்வனர்த்தத்தில் சிக்கி காணாமல்போனோரின் சடலங்களை இயலுமானவரை விரைவாக தேடிக்கண்டறிய வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு உண்டு' என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் தற்போதைய நிலைவரங்களை கண்காணித்து, தகவல்களைத் திரட்டுவதற்காக ஆணைக்குழுவின் அதிகாரிகள் களப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இக்கண்காணிப்புப் பணிகள் பூர்த்தியடைந்தவுடன் தமது அவதானிப்புக்கள் அடங்கிய முழுமையான அறிக்கை உரிய அதிகாரிகளிடம் கையளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.





