மலையக தமிழ்த் தொழிலாளர்கள் சுரண்டல்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் - சர்வதேச மன்னிப்பு சபை
45 தோட்டங்களில் 27 தோட்டங்கள் நாளொன்றுக்கு 25 கிலோவிற்கும் அதிகமான தேயிலைக் கொழுந்துகளைப் பறிக்க வேண்டும் என்ற யதார்த்தமற்ற இலக்குகளை விதிக்கின்றன.
இலங்கையின் தனியார் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் சிறு தோட்டங்களில் பணிபுரியும் மலையக தமிழ்த் தொழிலாளர்கள் கடுமையான தொழிலாளர் துஷ்பிரயோகங்கள் மற்றும் சுரண்டல்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்த துஷ்பிரயோகங்கள், சர்வதேச தொழிலாளர் அமைப்பு வரையறுத்துள்ள கட்டாய வேலை வாங்கலுக்கான குறியீடுகளுடன் பொருந்துவதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.
'இலங்கையின் மலையகத் தமிழ் தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள்' என்ற சர்வதேச மன்னிப்பு சபையின் ஆய்வறிக்கையின் வெளியீட்டு நிகழ்வு நேற்று புதன்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போது வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மன்னிப்புச் சபை ஜனவரி 2024 முதல் ஜனவரி 2026 வரையான காலப்பகுதியில், இலங்கையின் தென் மாகாணத்தில் உள்ள காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் 45 தேயிலைத் தோட்டங்களில் இந்த ஆய்வை மேற்கொண்டிருந்தது. 159 தொழிலாளர்கள் மற்றும் தோட்ட நிர்வாகத்தினருடன் நடத்தப்பட்ட நேர்காணல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : தொழிலாளர்கள் மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள், உடலியல் வன்முறைகள், சுதந்திரமான நடமாட்டக் கட்டுப்பாடுகள் மற்றும் மோசமான வேலைஃவாழ்க்கைச் சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். மேலும் தோட்டங்களில் வசிப்பிடத்துக்காக முதலாளிகளையே சார்ந்துள்ளதால், எப்போது வெளியேற்றப்படுவோம் என்ற அச்சத்திலேயே தொழிலாளர்கள் வாழ்கின்றனர்.
45 தோட்டங்களில் 27 தோட்டங்கள் நாளொன்றுக்கு 25 கிலோவிற்கும் அதிகமான தேயிலைக் கொழுந்துகளைப் பறிக்க வேண்டும் என்ற யதார்த்தமற்ற இலக்குகளை விதிக்கின்றன. இந்த இலக்கை அடையத் தவறின், அவர்களின் நாளாந்த சம்பளமான 1,000 ரூபாய் பிடிக்கப்படுகிறது அல்லது தாமதிக்கப்படுகிறது. இதனால் அடிப்படைத் தேவைகளுக்காக அவர்கள் வாங்கும் கடன்கள், தலைமுறைகளைக் கடந்து அவர்களை 'கடன்பணி அடிமைத்துவ' நிலைக்குள் தள்ளுகின்றன.
இந்தத் தொழிலாளர்களைத் தோட்டங்கள் 'அமயத் தொழிலாளர்களாக' (Casual Workers) வகைப்படுத்துவதால், பிரசவ கால சலுகைகள், ஓய்வூதியம் மற்றும் மருத்துவ விடுமுறைகள் போன்ற அடிப்படை சட்டப்பூர்வ உரிமைகளை அவர்கள் இழக்கின்றனர். அரச அதிகாரிகளுக்கு தமிழ் பேசத் தெரியாததால் ஏற்படும் மொழித்தடை, அதிகாரிகளின் பாரபட்சமான நடத்தை மற்றும் வேலை ஆவணங்கள் இன்மை காரணமாகத் தொழிலாளர்களால் நீதியை அணுக முடிவதில்லை. அத்துடன், ஆய்வு செய்யப்பட்ட எந்தவொரு தோட்டத்திலும் தொழிற்சங்கப் பிரதிநிதித்துவம் இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இதன் போது நிகழ்வில் உரையாற்றிய சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்தியப் பணிப்பாளர் ஸ்மிரிதி சிங், 'ஆழமாக வேரூன்றிய பாரபட்சம் மற்றும் விளிம்புநிலைப்படுத்தல் காரணமாகவே மலையகத் தொழிலாளர்கள் இவ்வாறான சுரண்டல்களுக்கு உள்ளாகின்றனர். ஏற்கனவே சட்டங்கள் இருந்தபோதிலும் அரசாங்கம் இந்தத் துஷ்பிரயோகங்களைத் தடுக்கத் தவறியுள்ளமை, தொழிலாளர்களைப் பாதுகாப்பதில் அதன் தோல்வியைப் பிரதிபலிக்கிறது.
எனவே, சர்வதேச மற்றும் உள்ளுர் சட்டங்களின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் உடனடியாக இந்தத் தோட்டங்களில் சோதனைகளை நடத்தி, தொழிலாளர் உரிமை மீறல்களைக் கண்டறிந்து, அதற்குப் பொறுப்பானவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு அர்த்தபூர்வமான தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.
இந்நிகழ்வில் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேஷன், ஜீவன் தொண்டமான் ஆகியோருடன், சிரேஷ்ட சட்டத்தரணிகளும் மலையக சிவில் செயற்பாட்டாளர்களுமான பாலசந்திரன் கௌதமன், சுகுமாரன் விஜயகுமாரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் ஆகியோர் உட்பட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, தேசிய பெண்கள் ஆணைக்குழு மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை உள்ளிட்ட பல முக்கிய அரச நிறுவனங்களின் பிரதிநிதிகளும், முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





