மாகாணசபை தேர்தலுக்கு நிதி ஒதுக்கியிருந்தால் தடை இல்லை - ரோஹண ஹெட்டியாரச்சி
பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 4பேரும் எம்முடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.
மாகாணசபை தேர்தலுக்கு நிதி ஒதுக்கியிருந்தால், சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள பாராளுமன்றத்தில் அனைவரும் இணங்கினால் இந்த வருடத்துக்குள் தேர்தலை நடத்துவதற்கு எந்த தடையும் ஏற்படப்போவதில்லை என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு அரசியல் கட்சிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், மாகாணசபை தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் தேர்தலுக்காக வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நிஹால் அபேசிங்க தெரிவித்திருந்தார்.
அதேநேரம் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 4பேரும் எம்முடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர். தேர்தலை விரைவாக நடத்துவதற்கு அவர்களின் இணக்கப்பாட்டையும் அவர்கள் எங்களுக்கு வழங்கி இருந்தனர். அத்துடன் கலந்துரையாடலில் கலந்துகொண்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் பிற்போடப்பட்டிருக்கும் மாகாணசபை தேர்தலை தற்காலிகமாகவேனும் பழைய முறைக்கு நடத்துவதற்கு பொதுவான இணக்கப்பாட்டை தெரிவித்திருந்தனர்.
அதனால் அரசாங்கம் பெரும்பான்மை அரசியல் கட்சிகளின் விருப்பத்துக்கமைய அரசாங்கம் தீர்மானித்தால், மிகவும் சிறிய திருத்தம் ஒன்றை மேற்கொள்வதன் மூலம் தற்போதுள்ள சட்டம் திருத்தப்பட்டு பழைய முறைக்கு செல்லலாம். இதன் மூலம் 5, 6 மாதங்களுக்குள் மாகாணசபை தேர்தலுக்கு எங்களுக்கு செல்லலாம்.
அதேநேரம் பெண்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவம் தொடர்பில் சட்ட ரீதியில் கோட்டா ஒன்று வழங்கப்படாவிட்டாலும் அரசியல் கட்சிகளின் வேட்புமனுவில், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு நூற்றுக்கு 25வீத கோட்டாவை வழங்குவதற்கும் அரசியல் கட்சிகள் அதற்கான இணக்கப்பாட்டை எங்களுக்கு வழங்கி இருந்தன. எனவே தேர்தலுக்கு நிதி ஒதுக்கியிருந்தால். சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள பாராளுமன்றத்தில் அனைவரும் இணக்கம் என்றால் இந்தவருடத்துக்குள் மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு எந்த தடையும் ஏற்படப்போவதில்லை என்றார்.





